5.7 செ.மீ. வாலுடன் பிறந்த பெண் குழந்தை; மருத்துவர்களின் ஆய்வறிக்கை சொல்லும் காரணம்!

மெக்ஸிக்கோவின் நியூவோ லியோனில் உள்ள ஒரு மருத்துவமனையில், 2 இன்ச் நீள வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது குறித்த ஆய்வறிக்கை, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிறைமாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இந்த குழந்தைக்கு, 5.7 செ. மீ நீளத்தில் மென்மையாகவும், கூர்மையாகவும் வால் காணப்பட்டது. தோலால் மூடப்பட்ட அந்த வாலில் மெல்லிய ரோமங்களும் இருந்தன. 3 மி.மீ. முதல் 5 மி.மீ. விட்டத்திற்கு இடையே இருந்த அந்த வால், கூர்மையான முனையை நோக்கி குறுகிக் காணப்பட்டது.

மாதிரிப்படம்

இதுபற்றி டாக்டர் ஜோசியூ ரியூடா தலைமையிலான மருத்துவர்கள் கூறுகையில் ,“மெக்சிக்கோவில் இப்படி ஒரு குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை. குழந்தை பிறக்கையில் வால் நுனி இடப்புறமாக தெரிந்தது. குழந்தை ஆரோக்கியமாகத்தான் பிறந்தாள். அந்த வால் பகுதி தோலால் மூடப்பட்டிருந்தது. மெல்லிய முடியும், கூர்மையான முனையும் அதற்கு இருந்தது. அதை தொட்டு அசைக்கும்போது எந்த வலியையும் அவள் உணரவில்லை. ஆனால் ஊசியால் குத்தியபோது அவளுக்கு வலித்தது. மேலும் அந்த வாலில் தானாக எந்த அசைவும் இல்லை” என்றனர்.

குழந்தையின் இந்த வால் பகுதியானது, அவள் இரண்டு மாதக் குழந்தையாக இருக்கையில் ஒரு சிறிய அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இப்போது அந்த குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லை. அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட அந்த வாலை ஆய்வு செய்கையில், அது தசை மற்றும் நரம்புகளைக் கொண்ட உண்மையான வால் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்குகளுக்கு இருப்பது போன்று எலும்புகளற்றது.

Baby (Representational Image)

இது குறித்து Journal of Paediatric Surgery மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், `இதுபோன்ற உண்மையான வாலுடன் குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது. இதுவரை 195 குழந்தைகள் இதுபோன்று பிறந்ததாகக் கண்டறியப்பட்டனர். அவர்களில் மிக நீளமான வாலாக, 20 செ. மீ (7.9 அங்குலம்) அளவு கொண்ட வால் கண்டறியப்பட்டுள்ளது. வால் கொண்ட 17 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளை அல்லது மண்டை ஓட்டின் வளர்ச்சிக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று மருத்துவர்களுக்கும் தெரியவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.