'மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு' – அரசு மீதான சர்ச்சைகளும் திமுக பதிலும்!

தமிழ்நாடு முழுவதும் தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் பிரிவில் 3.24 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருக்கின்றன. இது தவிர 10,000 – க்கும் மேற்பட்ட உயரழுத்த மின் பயனீட்டாளர்கள் இருக்கின்றனர். இதற்கிடையில் மின்சார வாரியத்தின் கடன் சுமையும், வருவாய் இழப்பும் அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் கடந்த செப்டம்பர் 10 -ம் தேதி முதல் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இதனை தொடர்ந்து முறைகேடாக மின்சாரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு வாரியம் தெரிவித்தது. அவ்வாறு செய்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என வாரியம் அறிவித்ததால் மின் நுகர்வோர் பலரும் ஒரே நேரத்தில் மின் வாரிய இணையதளத்தை அணுகினர். இதனால் சர்வர் முடங்கியது. பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், மறுபுறம் மின் கட்டணத்தை செலுத்த முடியாமலும் அவதிக்குள்ளாகினர்.

உயர்மின் கோபுரம்

இது தொடர்பாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் நவ. 28-ம் தேதி முதல் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். டிச. 31-ம் தேதி வரை ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி மின் கட்டணம் செலுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக மாறி, மாறி வெளியாகும் அறிவிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே மின்வாரியத்தின் தடுமாற்றத்திற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

செந்தில்பாலாஜி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் சடகோபன், “இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பதற்காக மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு வருகிறார்கள். அப்போது ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைத்துக்கொள்ளும் வகையில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்க மாட்டார்கள். குறிப்பாக வயதானவர்களும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாலும் மின்வாரிய அலுவலகங்களுக்குச் செல்ல முடியாது.

எனவே ரீடிங் எடுக்கும் போதே இந்த பணியை மேற்கொள்ளலாம். பண்டிகை காலம் மற்றும் மழை பெய்து வருவதால் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். சந்தேகங்களைப் பொதுமக்கள் தீர்த்துக்குக் கொள்ளும் வகையில் பிரத்தியேகமான உதவி எண் வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு அதை உறுதி செய்து கொள்வதற்கான மெசேஜ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதுவும் சரி செய்யப்பட வேண்டும்” என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் – நாராயணன் திருப்பதி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “இதன் மூலம் அரசு ஒரு தெளிவில்லாத நிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது. இதை எதற்கு செய்கிறோம், என்ன பயன் இருக்கிறது என்று தெளிவாக விளக்கவில்லை. மக்களை முட்டாள்களாக நினைத்து நாங்கள் சொல்வதை மக்கள் உடனடியாக கேட்க வேண்டும் என நினைத்து செய்யப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “டிச. 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. சிறப்பு முகாம்கள் நடத்துகிறோம். ஆன்லைனிலும் இணைக்க முடியும். மக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை. அதிகாரிகள் அவர்களாகவே உடனடியாக இணைக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டார்கள். அரசு தெளிவாக நடவடிக்கை எடுத்திருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.