இவர்களுக்கெல்லாம் வயிறு எரிகிறது: அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். தமிழகம் அமைதியாக இருக்கிறது என்று இவர்களுக்கு எல்லாம் வயிறு எரிகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் – பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள் நிறைந்து காணப்படும் மாவட்டம் அரியலூர். கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம் இது. தொல்லியல் துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கி உள்ளோம். அரியலூரில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதைபடிம பூங்கா அமைக்கப்படும். சிமென்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகன வசதிக்கு சிமென்ட் காரிடர் சாலை அமைக்கப்படும். அரியலூர் போன்றே பெரம்பலூர் மாவட்டத்திலும் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் பின் தங்கிய மாவட்டம் என எதுவும் இருக்கக்கூடாது என்ற இலக்குடன் உழைக்கிறோம். மக்கள் நலம் ஒன்றையே சிந்தையில் கொண்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தமிழ்நாடு நோக்கி வருகின்றன. அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.

ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது? ஒரு முதல்-அமைச்சர் எப்படி நடந்துகொள்ளக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்தகால ஆட்சி. தனது கையிலே அதிகாரம் இருந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்தது. தனது கையாலாகத தனத்தை வெளிப்படுத்தி 10 ஆண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இப்போது இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார் கொடுக்கிறார்கள். யாரிடம் என்பது உங்களுக்கு தெரியும்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என்று இவர்களுக்கு எல்லாம் வயிறு எரிகிறது. சிலர் ஆபத்து ஆபத்து என்று அலறிக்கொண்டிருக்கின்றனர்.

இப்படி சொல்லும் சிலருக்கு இருக்கும் பதவி நிலைக்குமா? என்று பயமாக உள்ளது. அதனால் தான் மக்களை பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சி தான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது, கவலைபடாதீர்கள். விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை வரவேற்கிறேன்.. ஆனால், விஷமத்தனம் கூடாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.