ஊர்க்காவல் படை பணி நாள்கள் எவ்வளவு? அரசாணையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி!

தமிழக ஊர்க்காவல் படையினரின் பணி நேரத்தை குறைத்த அரசாணையை எதிரத்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஊர்க்காவல் படையினர் பணி நாட்களை மாதத்தில் 5 நாட்களாக குறைத்து 2017ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஊர்க் காவல் படையை சேர்ந்த அந்தோணி தாஸ் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு செய்யப்பட்டது.

அந்த மனுவில், முதலில் 25 நாட்கள் பணிக்கு அழைக்கப்பட்ட நிலையில் ஊர்க்காவல் படையினருக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே தாங்கள் பணிக்கு அழைக்கப்படுவதாக கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஊர்க்காவல் படையினர் பணிக்காலம் 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக அதிகரிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியமும் எட்டு மணி நேரத்திற்கு 560 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஊர்க்காவல் படை என்பது அரசு பணி இல்லை எனவும் சொந்த விருப்பத்தின் பேரில் பணியாற்றுவது எனவும் தெரிவித்தார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பணி நாட்களை குறைத்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.