தடைக்குப் பின் மீண்டும் ‘வராஹ ரூபம்’ ஒரிஜினல் வெர்ஷன்; கமெண்ட்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்

கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்ட நீதிமன்றங்கள் விதித்த இடைக்கால தடை நீங்கிய நிலையில், ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடலின் ஒரிஜினல் வெர்ஷன் மீண்டும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சேர்க்கப்படும் என்று படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி ட்வீட் செய்துள்ளார்.

கன்னட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த ‘காந்தாரா’ திரைப்படம், கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கன்னடத்தில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், சுமார் 50 நாட்களில் இந்தப் படம் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. ‘கே.ஜி.எஃப்’ படத்தை தயாரித்திருந்த ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது.

ஆனால் இந்தப் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில், கேரளாவைச் சேர்ந்த ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற இசைக்குழு, தங்களின் பாடலான ‘நவரசம்’ பாடலின் காப்பிதான், ‘வராஹ ரூபம்’ பாடல் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்தப் பாடல் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டது. இதனால், ‘வராஹ ரூபம்’ பாடலின் ஒரிஜினல் ட்ராக் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்தது. இது பழைய பாடல் போன்ற ஆத்மார்த்தமான அனுபவத்தை தராததால், ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

image

இதற்கிடையில், ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு விதிக்கப்பட்ட தடையை கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் விலக்கிக் கொண்டது. இதையடுத்து ஹோம்பாலே ஃபிலிம்ஸின் யூட்யூபில் நீக்கப்பட்ட ‘வராஹ ரூபம்’ பாடலின் ஒரிஜினல் வெர்ஷன், மீண்டும் இன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், “‘கடவுளின் ஆசியாலும், மக்களின் ஆதரவினாலும் ‘வராஹ ரூபம்’ வழக்கில் வெற்றி பெற்றுள்ளோம். மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு விரைவில் ஓடிடி தளத்தில் பாடலை மாற்ற உள்ளோம்” என்று இயக்குநர் ரிஷப் ஷெட்டி மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

பாலக்காடு மாவட்ட நீதிமன்றம்

மேலும் ‘காந்தாரா’ படத்தின் ‘வராஹ ரூபம்’ பாடல் தொடர்பான காப்புரிமை சர்ச்சை தொடர்பாக, படத்தின் தயாரிப்பாளர் ஹோம்பலே பிலிம்ஸ் மீது மாத்ருபூமி பிரிண்டிங் அண்ட் பப்ளிஷிங் கம்பெனி லிமிடெட் (எம்பிபிசிஎல்) தாக்கல் செய்த வழக்கை பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் அதிகார வரம்புக்குட்பட்டதாக இல்லை என்றுக் கூறி சனிக்கிழமை திருப்பி அனுப்பியது.

இதனால், திரைப்படத்தில் “வராஹ ரூபம்” பாடலைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட இரண்டு இடைக்காலத் தடை உத்தரவுகளும் செயலிழந்துள்ளன. கடந்த வாரம், கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம், ‘நவரசம்’ பாடலை இயக்கிய ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ தாக்கல் செய்த வழக்கை வணிக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பியது.

கேரள உயர்நீதிமன்றம்

தாய்க்குடம் பிரிட்ஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் கேரள உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தி வைத்தாலும், இந்த தடை உத்தரவு முந்தைய தடை உத்தரவை புதுப்பிக்காது என்று தெளிவுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

image

வழக்கு கடந்து வந்த பாதை:

அக்டோபர் 28: ‘காந்தாரா’ திரைப்படத்தில் ‘வராஹ ரூபம்’ பாடலை திரையரங்குகள் அல்லது ஸ்ட்ரீமிங் தளங்களில் பயன்படுத்துவதற்கு எதிராக தாய்க்குடம் பிரிட்ஜ் தொடுத்த வழக்கில் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

நவம்பர் 2: ஹோம்பாலே ஃபிலிம்ஸ் றுவனம், இயக்குநர் உள்பட OTT தளங்களில் காட்சிப்படுத்துதல், இசைத் தளங்களில் வெளியிடுதல், ஸ்ட்ரீமிங் செய்தல், விநியோகம் செய்தல் ஆகியவற்றில் இருந்து MPPCL தாக்கல் செய்த வழக்கில், பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் மற்றொரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. மறு உத்தரவு வரும் வரை ‘வராஹ ரூபம்’ பாடல் ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டது.

நவம்பர் 25 : தாய்க்குடம் பிரிட்ஜின் வழக்கை வணிக நீதிமன்றத்தில் மட்டுமே வாதம் செய்ய முடியும் என்று ஹோம்பாலே தயாரிப்பு நிறுவனம் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனையை கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

டிசம்பர் 1: கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. தாய்க்குடம் பிரிட்ஜின் வழக்கின் முதல் மேல்முறையீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

டிசம்பர் 2 : தாய்க்குடம் பிரிட்ஜின் வழக்கை திரும்பப் பெறும் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டதால், ‘வராஹ ரூபம்’ பாடலுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீட்டெடுக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.

டிசம்பர் 3: அதிகார வரம்புக்கு உட்பட்டதாக இல்லை என்று பாலக்காடு மாவட்ட நீதிமன்றம், MPPCL தாக்கல் செய்த வழக்கை திருப்பி அனுப்பியது. இதனால் தற்போது ‘காந்தாரா’ படத்தில் ‘வராஹ ரூபம்’ பாடலைப் பயன்படுத்த இடைக்காலத் தடை ஏதும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.