நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவையில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு ……..

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவையில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திற்கும், நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு மாகாண ஆணையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திற்கும், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு மாகாண ஆணையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் (02) இடம்பெற்றது.

இந்த ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி குமாரி விஜயரத்ன தலைமையில் அண்மையில் (02) பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாமல் லியனகே உள்ளிட்ட பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், நாடு முழுவதிலுமுள்ள நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகளின் மாகாண ஆணையாளர்கள் மெய்நிகர் முறையில் (Online) இணைந்துகொண்டனர்.

நாட்டின் சகல மாகாணங்களிலும் உள்ள நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஆணையாளர்கள் தமக்குக் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் முன்மொழிவுகளை ஒன்றியத்தில் முன்வைத்ததுடன், இந்த முன்மொழிவுகளை ஒரு வார காலத்துக்குள் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு எழுத்துமூலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு ரோஹினி குமாரி விஜயரத்ன பணிப்புரை விடுத்தார்.

இந்த முன்மொழிவுகளை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆற்றுப்படுத்தி உரிய தீர்வுகளை விரைவில் பெற்றுக்கொடுக்க சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தலையிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சட்ட ரீதியில் சத்தியக் கடதாசிகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கு அனைத்து நன்னடத்தை அதிகாரிகளுக்கும் சமாதான நீதவான்கள் நியமனம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சருடன் கலந்துரையாடி உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.

நன்னடத்தைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர்களை சமூகமயப்படுத்தும்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து மாகாண ஆணையாளர்கள் ஒன்றியத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். அதற்கமைய, நன்னடத்தையில் உள்ள குழந்தைகளை சமுதாயத்தின் பயனுள்ள குடிமக்களாக வடிவமைக்கும் திட்டத்தை தயாரிக்குமாறு நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் துறைக்கு ஒன்றியம் அறிவுறுத்தல் வழங்கியது. சிறப்பு தொழிற்பயிற்சித் திட்டங்கள் மூலம் இந்த குழந்தைகளை பயிற்சி பெற்ற தொழிலாளர்களாக சமூகமயமாக்குவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய விபரங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுவதைத் தடுப்பதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் அடங்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இவ்விடயத்தில் தலையிடுவதாக நீதி அமைச்சர் ஒன்றியத்துக்கு அறிவித்திருப்பதாகவும் விஜயரத்ன தெரிவித்தார்.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் நன்னடத்தை மாகாண ஆணையாளர்களுக்கான இரண்டு செயற்திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஒன்றியத்தின் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

நன்னடத்தைக்கு உள்ளாகும் சிறுவர்கள் மற்றும் நன்னடத்தைக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையிலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு சம்மந்தப்பட்ட அமைச்சுக்கு ஒன்றியம் அறிவித்தது.

நன்னடத்தைக்கு உள்ளாகும் சிறுவர்களின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்புத் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனத் தலைவர் வலியுறுத்தினார்.

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்துக்கும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சந்திப்பொன்றை நடத்தி அத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ வீரசுமண வீரசிங்ஹ, கௌரவ ராஜிகா விக்கிரமசிங்ஹ மற்றும் கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.