மாண்டஸ் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்: தமிழக அரசுக்கு பாமக பாராட்டு!

மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி

சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்பட்ட மாண்டஸ் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் சென்றிருக்கிறது. மக்களுக்கு பெரிய அளவில் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதற்கு அரசு செய்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். அரசுக்கு பாராட்டுகள்.

அதே நேரத்தில் கடலோரப்பகுதிகளில் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. கடல் அரிப்பின் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகள் இடிந்துள்ளன. மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை சரி செய்ய லட்சக்கணக்கில் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்களின் வலைகள் முழுமையாக நாசமடைந்து விட்டதால் அவர்களால் மீன்பிடிக்கச் செல்ல முடியாது. அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை அரசே சரி செய்து தர வேண்டும்; மீனவர்களுக்கு புதிய வலைகளை வாங்கித் தர வேண்டும். கடல் சீற்றத்தால் இடிந்து விழுந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அரசின் செலவில் கட்டித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும் என

நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.

புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்.

நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலோரப்பகுதிகளில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.