இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாக்., அமைச்சர் பல்டி| Dinamalar

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு அணுஆயுத மிரட்டல் விடுத்து பாகிஸ்தான் பெண் அமைச்சர் பேட்டி கொடுத்தார். இது குறித்து இந்திய மீடியாக்களில் செய்தி வெளியான நிலையில், அவர் தனது கருத்தில் இருந்து மாறி, பாகிஸ்தான் பொறுப்பான அணுசக்தி நாடு என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் பேசுகையில், குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு மத்திய அரசு, கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மத்திய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை பா.ஜ.,வினர் முற்றுகையிட்டனர். நாடு முழுவதும் பிலாவல் பூட்டோவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இருப்பினும் தனது கருத்தில் பின்வாங்காத பிலாவல் பூட்டோ , ” தான் வரலாற்றின் அடிப்படையில் தான் கருத்து கூறினேன். எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது ” எனக்கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கண்டனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிலாவல் பூட்டோவிற்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் அமைச்சர் ஷாஜியா மரி கூறுகையில், மோடி அரசு போரை துவக்கினால், அதற்கு பதில் கொடுக்கப்படும். பாகிஸ்தானிடமும் அணு ஆயுதம் உள்ளதை இந்தியா மறந்துவிட வேண்டாம். பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுத அந்தஸ்தானது அமைதியாக இருப்பதற்கு அல்ல. எப்படி பதில் கொடுப்பது என பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்தால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். இது இனிமேல் நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

இந்நிலையில், ஷாஜியா மரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் பொறுப்பான அணுசக்தி நாடு. இந்தியாவில் உள்ள சில மீடியாக்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இந்திய அமைச்சர் தெரிவித்த கருத்துக்கே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பதில் கொடுத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், இந்தியாவை விட பாகிஸ்தான் தான் அதிக தியாகம் செய்துள்ளது. பிரிவினைவாதம் மற்றும் பாசிசத்தை இந்திய அரசு தூண்டி வருகிறது எனக்கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.