“பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட வழிகாட்டுங்கள்…“ – நல்லகண்ணு பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98-வது அமைப்பு தினமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாள் விழாவும் சென்னையில் இன்று (டிசம்பர் 26) கொண்டாடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

நல்லகண்ணுவுக்கு புத்தகம் பரிசளித்தார் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “ஒவ்வோர் ஆண்டும் தலைசிறந்த பெருமக்களைத் தேர்வுசெய்து தமிழக அரசின் சார்பில் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படுகிறது. முதல் ஆண்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டது. இரண்டாவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவர்கள் இருவருக்கும் தகைசால் தமிழர் விருதை வழங்கியதன் மூலம், இந்த விருதுக்கு பெருமை சேர்ந்திருக்கிறது” என்றார்.

மேலும், “98 வயதிலும் கொள்கையிலிருந்து நழுவாமல், கொள்கைக்கும் லட்சியத்துக்கும் இலக்கணமாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் நல்லகண்ணு அவர்களை தமிழக அரசின் சார்பிலும், தி.மு.க சார்பிலும் வாழ்த்தி வணங்குகிறேன். பாசிச பா.ஜ.க ஆட்சிக்கு முடிவுகட்ட நாம் முடிவெடுத்திருக்கிறோம்.

ஸ்டாலின், வைகோ, முத்தரசன், பொன்முடி, ஏ.வ.வேலு, கோபண்ணா

அதற்கு நல்ல வழிகாட்டியாக நல்லகண்ணு விளங்குகிறார். பா.ஜ.க அரசை அகற்றவதற்கு தொடர்ந்து நீங்கள் வழிகாட்ட வேண்டும். தமிழ்நாட்டில் உங்களால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நீங்கள் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்து, தொடர்ந்து வழிகாட்ட வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “தியாகம், தன்னலமற்ற உழைப்பு, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரம் ஆகியவற்றின் மறுபெயர்தான் நல்லகண்ணு. இந்த நாளில்தான், 97 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நல்லகண்ணு பிறந்தார். இதே நாளில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது. இதே நாளில்தான், சீனப் புரட்சியாளர் மாவோ பிறந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.டி.கே.தங்கமணியின் நினைவுநாளும் இன்றுதான்” என்று வைகோ குறிப்பிட்டார்.

ஸ்டாலின், நல்லகண்ணு, வைகோ

மேலும், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் யெலாளராக 13 ஆண்டுகள் செயலாற்றியவர் நல்லகண்ணு. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே பொதுவுடைமைக்கொள்கையால் ஈர்க்கப்பட்ட நல்லகண்ணு, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல தியாகங்களைச் செய்தவர். நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. அவரை மலைஉச்சிக்கு அழைத்துச்சென்று, மலையிலிருந்து உருட்டி கொலை செய்துவிடுவோம் என்று அவரை அச்சுறுத்தினார்கள்.

தீயால் அவரது முகத்தைப் பொசுக்கினார்கள். ஆனால், அவர் எதற்கும் அஞ்சவில்லை. அவருக்கு தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருதுடன் 10 லட்சம் ரூபாய் வழங்கியது. அந்த 10 லட்சம் ரூபாயை தனது பாக்கெட்டில் இருந்த 5,000 ரூபாயையும் சேர்த்து தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதிக்குக் கொடுத்தவர் நல்லகண்ணு. தமிழ்ச்சான்றோர் பேரவை அவருக்கு கார் வழங்கியது. அதை அவர் கட்சிக்கு கொடுத்துவிட்டார். இப்படிப்பட்ட தியாகசீலர்களைப் பார்ப்பது அரிது” என்றார் வைகோ.

நல்லகண்ணுவை வாழ்த்திய ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ஜி.ராமகிருஷ்ணன், “இன்றைக்கு நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பெருமைக்குரிய தலைவர்களான என்.சங்கரய்யா, இரா.நல்லகண்ணு ஆகியோர் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக களம்கண்டு, எண்ணற்ற தியாகங்களைச் செய்தவர்கள். ‘இவர்கள் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான்…. அந்நியர் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டும் போதாது. பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும்’ என்கிற முழக்கத்தை முதன்முதலாக முன்வைத்தனர்.

சுதந்திரப்போராட்ட காலத்தில், எப்படிப்பட்ட இந்தியா அமைய வேண்டும் என்ற கருத்துக்களை நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்களைக் கொண்ட கம்யூனிச இயக்கம் முன்வைத்தது. மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு பொருளாதாரம் ஆகிய விழுமியங்களுடன் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த விழுமியங்களை, மத்தியில் இருக்கும் மோடி தலைமையிலான அரசு தகர்த்துவருகிறது. ஆகவே, அந்த ஆட்சியை அகற்ற வேண்டும். இந்துத்துவாவை வீழ்த்த வேண்டும். அதற்கு, நல்லகண்ணு தொடர்ந்து பங்காற்ற வேண்டும்” என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

சி.மகேந்திரன் பேசியபோது…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளான சி.மகேந்திரன், மு.வீரபாண்டியன், ம.தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.