”ஒரு நல்ல படத்திற்கு அதுவே புரமோஷன்”.. புரமோஷன் எல்லாம் ஓகே? கதை, திரைக்கதை எங்கே?

“நல்ல படத்துக்கு எதுக்கு புரோமோஷன், நல்ல படமாக இருந்தால் அதன் கதையும் வேலையுமே அதற்கு புரோமோஷன்” என நடிகர் அஜித்குமார் கூறியதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இப்படி இருக்கையில், அவரது துணிவு படத்துக்கான வேலைகளை படக்குழு தற்போது இறங்கியிருக்கிறது. அதன்படி துபாயில் ஸ்கைடைவிங் மூலமும், நியூயார்க்கின் டைம் ஸ்கொயரிலும் துணிவு பட புரோமோஷன் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாக் கூட சென்னையில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களை வரவைத்து பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இந்த நிலையில், திரைப்படங்களுக்கு ஷூட்டிங், சம்பளம் போன்றவற்றையெல்லாம் தாண்டி புரோமோஷனுக்காகவே குறிப்பிட்ட அளவில் கோடிக்கணக்கில் செலவிடுவது எந்த அளவுக்கு தேவையானது மற்றும் இத்தனை கோடி செலவு செய்து ஒரு படத்துக்கு புரோமோஷன் செய்வதால் என்ன மாதிரியான பயன்கள் ஏற்படுகின்றன என்பதை காணலாம்.

image

உச்ச நட்சத்திரங்களின் படங்களின் கதைக்களத்துக்கும், அதற்காக மேற்கொள்ளப்படும் புரோமோஷன்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்கான வித்தியாசமே இருக்கும். குறிப்பாக பிரம்மாண்ட பொருட் செலவில் ஆடியோ, டீசர், ட்ரெய்லர் வெளியீட்டு விழா வைப்பது, ட்ரெயின், பஸ், ஃப்ளைட் என போக்குவரத்துகளில் விளம்பரம் செய்வது என பல புரோமோஷன்கள் நடக்கின்றன.

புரமோஷன் ஓகே.. கதை மற்றும் திரைக்கதையும் முக்கியம் தானே!

ஒரு படம் தியேட்டர் என்ற சந்தைக்கு வருவதற்கு விளம்பரங்கள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதப்படுகிறதோ அதே அளவுக்கான முக்கியத்துவம் கதை மற்றும் திரைக் கதைக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே பரவலான கருத்தாக இருந்து வருகிறது. குறிப்பாக படத்தில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு நூறு கோடி அளவுக்கு சம்பளத்தை வாரி இறைத்துவிட்டு அந்த கதையை உருவாக்க முக்கிய காரணமாக இருக்கும் எழுத்தாளர்களுக்கோ, வசனகர்த்தாக்களுக்கோ கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் படமும் நிலைத்து நிற்கும்.

ஏனெனில் ஒரு படம் என்பது எந்த அளவிற்கு எங்கேஜிங்காக இருக்கும் என்பது அந்த படத்தின் கதை மற்றும் கதை எடுக்கப்படும் விதம் ஆகியவற்றில் தான் உள்ளது. இப்படி ஒரு படம் சிறப்பான ஒன்றாக உருவாவதற்கு என்ன என்ன தேவையோ அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

image

பல கோடிகள் செலவிட்டு குறைந்த லாபத்தை ஈட்டுவது எப்படி வெற்றி ஆகும்?

ஆனால் அவற்றை விடுத்து ஒரு படத்துக்கு புரோமோஷன் செய்தால் மட்டும் போதும் ஆட்டோமேட்டிக்காக மக்கள் தியேட்டருக்கு படையெடுப்பார்கள் என கடிவாளம் போட்டது போல பயணிப்பது உச்ச நட்சத்திர அந்தஸ்த்தில் இருக்கும் நடிகர்களுக்கும், இயக்குநர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் நீங்கலாக துறை ரீதியான எந்த பெருமையும் கிட்டிடாது என்பதே பொது கருத்தாக இருக்கிறது.

குறிப்பிடும் வகையில் சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் பாலிவுட், கோலிவுட் சினிமாக்களில் மட்டுமே புரோமோஷனுக்காக கோடிக் கணக்கில் பணம் அள்ளி வீசப்படுகிறது. அதுவும் ஒரு படத்தின் பட்ஜெட் 400 கோடியாக இருந்து, அது வெளியான பிறகு அதே 400 கோடியோ அல்லது 450 கோடியோ வசூலித்திருந்தால் அது நல்ல வசூல் செய்யப்படமாக எப்படி கருதப்படும்?. ஒரு படம் தயாரிக்க ஆன செலவை காட்டிலும் கூடுதலாக எவ்வளவுக்கு எவ்வளவு சதம் அதிகம் வசூலிக்கிறதோ அதனை பொறுத்தே சிறந்த படம் என்பதை சொல்ல முடியும்.

உதராணத்துக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படத்தின் மொத்த பட்ஜெட் தோராயமாக 30 கோடியாகவே இருந்திருக்கிறது. ஆனால் அந்த படத்தின் வசூலோ 100 கோடியை தாண்டியிருக்கிறது.

image

இப்படி குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதையம்சத்தோடு எடுக்கும் படங்களுக்கு கிடைக்கும் இத்தகைய கலெக்‌ஷனை பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பதா? அல்லது போட்ட முதலீட்டு பணமே வசூலாக வந்ததை பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என கூறமுடியுமா? என்ற இந்த கேள்வியே சினிமா வட்டாரத்திடையேவும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இருக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் அசத்தும் மலையாள, கர்நாடக படங்கள் 

அதே வேளையில் கர்நடகா, கேரளாவில் எடுக்கப்படும் சின்ன பட்ஜெட் படங்களெல்லாம் பான் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு சக்கப்போடு போடுகிறது. அதில் கே.ஜி.எஃப் 1 & 2, காந்தாரா, குரூப், ஜன கன மன, ஹிருதயம், ஜெய ஜெய ஜெய ஹே போன்ற பல படங்களின் மொத்த பட்ஜெட்டே அதிகபட்சம் 10 முதல் 40 கோடிக்குள்ளாகவே இருக்கும். ஆனால் வசூலித்த கலெக்‌ஷனோ உச்சத்தில் இருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் அவர்கள் சிறிய கதை அம்சத்தை எடுத்துக் கொண்டு அதனை பார்வையாளர்களின் மனதில் தைக்கும் வண்ணம் திரைக்கதையை உருவாக்கி அசத்திவிடுவார்கள். இந்த கதையை இப்படியெல்லாம் உணர்வுபூர்வமாக எடுக்க முடியுமா என்று நம்மை வியக்க வைத்துவிடுவார்கள். 

வானாளவிய, உலகமே கண்டு வியக்கும் அளவுக்கான புரோமோஷனை காட்டிலும் பத்திரிகையாளர்களை சந்திப்பது, நேர்காணல் நடத்துவது போன்ற குறைந்த செலவிலான புரோமோஷன் வேலைகளையே இப்படியான சின்ன பட்ஜெட் படங்கள் செய்திருக்கின்றன.

image

சினிமா என்றாலே வெறும் வியாபாரம் தானா?

சினிமா என்றாலேயே படைப்பு, கலை மற்றும் வியாபாரம் என்பதையெல்லாம் தாண்டி தற்போதைய காலகட்டத்தில் சினிமாவை வெறும் வியாபாரமாக மட்டுமே கருதி அதே டெம்ப்ளேட் பாணியிலான படங்களே அண்மைக்காலமாக வெளியாகி வருகிறது. இது கதைக்கான, கற்பனை வளத்துக்கான வறட்சியா அல்லது எதையாவது படமாக எடுத்து புரோமோஷன் செய்தால் போதும், படத்தை பார்க்க அவர்களாகவே ஓடோடி வருவார்கள் என்ற எண்ணமா?

ஆனால் 400, 500 கோடி செலவில் படத்தை எடுத்து எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் ஊர் ஊராக சுற்றி எப்படியாவது படத்தை பார்க்க மக்கள் கூட்டம் வந்துவிட வேண்டும் என்ற பாணியிலான புரோமோஷன் வேலைகளே அண்மைக்காலங்களாக நடந்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு படத்துக்கான கதைக்களமாக சிறு, குறு நாவலோ, கட்டுரையோ நாதமாக இருக்கும். அப்படி இல்லையெல்லாம் கதை, திரைக்கதைக்கு என்று தனியாக சிலர் பணியாற்றுவார்கள். பாலகுமாரன் போன்றவர்கள் வசன கர்த்தாவாக மிரள செய்ததும், மணிவண்ணனின் கதைகளை எடுத்து பாரதிராஜா படமாக இயக்கியதையும் இங்கு குறிப்பிடலாம். அதாவது, கதையும், திரைக்கதை வசனும் எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் தற்போது உணர்வதே இல்லை.

நல்ல கதைகளை அடிப்படையாக கொண்டு சிறப்பாக திரைக்கதை அமைத்து அந்த கதைக்களத்துக்கு ஏற்றவாறு பாடல்கள், காட்சிகள் அமைத்து வெள்ளி விழா வரை கொண்டாடப்பட்ட படங்களின் காலங்களெல்லாம் மலையேறி, இப்போது படம் வெளியான மூன்றுநாள்தான் கணக்கு. அதுவும் கலெக்‌ஷன் வந்தால் போதும், கதை எப்படி இருந்தாலும் பரவாயில்லை, உச்ச மற்றும் முன்னணி நட்சத்திரங்களில் படமாக இருந்தால் மட்டும் போதும் என்ற பொது கணக்கே இருக்கிறது. இதில் தயாரிப்பாளர் மற்றும் உச்ச நடிகர்களின் அச்சமும் ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவேளை திரைப்படம் ஓட வில்லை என்றால் என்ன செய்வது. முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு எப்படியாவது புரமோஷன்கள் மூலம் கூட்டிவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். மவுத் டாக் என்பதன் முக்கியத்துமே தற்போது இல்லை. ஒரு படம் நன்றாக இருந்தால் அதுவே தன்னைத்தானே புரமோஷன் செய்து கொள்ளும். 

image

சமீபத்தில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் செய்த சம்பவம்!

அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான் மற்றும் பிரின்ஸ் போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களின் படங்களின் கதைக்களமே சுமாராகத்தான் இருந்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த படங்கள் பெரிய அளவில் புரமோஷன்கள் மூலம் ரசிகர்களை திரையரங்கு நோக்கி ஈர்த்தது. ஆனால், திரையரங்கு வந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. வியாபார யுக்தியின் மூலம் ஒரு பொருளை எப்படியாவது வாடிக்கையாளர் தலையில் கட்டிவிடுவது போல திரைப்படங்களை ரசிகர்களின் தலையில் கட்டி உச்ச நட்சத்திரங்கள் லாபத்தை ஈட்டிவிடுகிறார்கள். இது தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி போன்ற சினிமாவுக்கு நல்ல லாபம் கொடுக்கக் கூடிய wood-களிலும் இதே நிலைமையே நீடிக்கிறது.

ஆனால் நித்தம் ஒரு வானம், அனல் மேலே பனித்துளி, அம்மு போன்ற பல நல்ல கதையம்சம் கொண்ட, ஃபீல் குட் மூவிஸ் என்ற ரகத்தில் இருக்கும் படங்களோ அமைதியாக OTT தளங்களுக்கு சென்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கான வெற்றியையே பெறுகின்றன.

இறுதி கருத்து – ஒரு படமே அதற்கான புரமோஷன்!

ஆகவே “சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்” என்ற பேச்சுக்கு ஏற்ப பிரமாண்டமான முறையில் புரோமோஷனை மேற்கொண்டாலும் படத்தில் கதையும் திரைக்கதையும் இல்லையென்றால் எத்தனை கோடியை செலவழித்து படமெடுத்தாலும் என்ன வருமோ அதுதான் வரும் என்பதே இதன் மூலம் தெள்ளத்தெளிவாக இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.