புத்தாண்டை ஒட்டி வானில் தோன்றிய அதிசயம்… சேலம் அருகே மக்கள் செம சர்ப்ரைஸ்!

உலகம் முழுவதும் புத்தாண்டு 2023 பிறந்துவிட்டது. இதை பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். வான வேடிக்கைகள் ஒருபுறம், வாழ்த்து செய்திகளின் பரிமாற்றம் மறுபுறம் என உற்சாகம் கரைபுரண்டு ஓடி வருகிறது. மேலும் புத்தாடைகள் உடுத்தி இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

வானில் நிகழ்ந்த அதிசயம்

இந்த சூழலில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக தமிழகத்தில் உள்ள சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானில் நிகழ்ந்த அதிசயம் பெரும் கவனம் பெற்றுள்ளது. அதாவது நட்சத்திரங்கள் ரயில் பெட்டிகள் போன்று வரிசையாக கடந்து சென்றுள்ளன. அவை ஓரிடத்தில் நிற்காமல் நகர்ந்து சென்றிருக்கின்றன. குறிப்பாக தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி, ஏற்காடு, குப்பனூர், அயோத்தியாபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.

வைரலாகும் செய்தி

அவற்றை தங்கள் செல்போன்களில் படம்பிடித்து, ”இதென்ன அதிசயம்?” எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. இந்த வெளிச்சம் ஸ்டார் லிங் செயற்கைகோள்களா? இல்லை வேறு ஏதேனும் மர்ம பொருட்களா? வேற்று கிரகவாசிகளின் படையெடுப்பா? நட்சத்திரங்களின் நகர்வா? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்கள்

இரவு நேரத்தில் சேலம் பகுதி மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி கொண்டிருக்கும் போது, இப்படி ஒரு நிகழ்வு வானில் அரங்கேறியுள்ளது. இருப்பினும் விண்வெளி ஆய்வாளர்கள் உறுதி செய்யும் வரை நாமாக எதையும் முடிவு செய்துவிட முடியாது. இதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு கனடா நாட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஸ்பேஸ் எக்ஸ் செயற்கைகோள்களா?

ஆனால் அது தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக SpaceX நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவை பார்ப்பதற்கு வானில் நட்சத்திரங்கள் ரயில் பெட்டிகள் நகர்வது போன்று காணப்பட்டன. இதேபோல் தான் சேலம் சுற்றுவட்டாரப் பகுதியிலும் நிகழ்ந்துள்ளது.

விடிய விடிய போலீசார் பாதுகாப்பு

இதனால் ஸ்டார் லிங்க் செயற்கைகோள்களாக இருக்கலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சேலத்தில் சுமார் 1,200 போலீசார் விடிய விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக சேலம் மாநகரில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் செல்ல போலீசார் தடை விதித்தனர்.

தீவிர கண்காணிப்பு

இதையொட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சாலையின் நடுவில் கேக் வெட்டி இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்படுகிறார்களா? என கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டும் நிகழ்வுகளை தடுக்கும் வகையிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்காக துணை ஆணையர் லாவண்யா தலைமையில் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், போலீசார் பழைய பேருந்து நிலையம், திருச்சி மெயின் ரோடு, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.