குடும்ப ஓய்வூதியம்… உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் சொல்வதென்ன?

எது ஒன்றன் மீதும் நாம் நமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முற்படுவதற்கு முன், அது தொடர்பான விதிகளை ஓரளவு தெரிந்து கொள்வது அவசியம். அவ்வாறு தெரிந்து கொண்டு செயல்பட்டபோதும் கூட, விதியில் உள்ள சிறு விடுபாடு அல்லது குறைபாடு, நமது உரிமையை இல்லாமல் ஆக்கி விடக்கூடும்.

அவ்வாறான வழக்கு ஒன்றன் மீது, நீதியரசர்கள் கே.எம். ஜோஸப் மற்றும் பி.வி. நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு, கடந்த 17.01.2023 அன்று வழங்கியுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு பெரிதும் கவனத்துக்குள்ளாகி இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்

குடும்ப ஓய்வூதியம்

இவ்வழக்கு, குடும்ப பென்ஷனுக்காக உரிமை கோருவது பற்றியது. அதாவது, குடும்ப ஓய்வூதியம் பெற நிபந்தனையற்ற உரிமை உடையவர்கள், இறந்து போனவர் ஆண் ஊழியர் எனில் மனைவி; பெண் ஊழியர் எனில் கணவர். இவர்கள் இருவருக்கும் மரணம் அல்லது மறுமணம் வரை குடும்ப ஓய்வூதியம் என்பது கிடைக்கும். வேறு நிபந்தனை கிடையாது.

இறந்து போன ஊழியருக்கு மனைவி/கணவர் இல்லாத பட்சத்தில் (அதாவது அவர்களில் ஒருவர் முன்னரே இறந்து போய் இருக்கும் பட்சத்தில்) மகன், மகள், பெற்றோர் முதலானவர்கள் உரிமை வரிசைப்படி குடும்ப ஓய்வூதியம் பெறலாம்.

மகன், மகள் முதலான (NOK- Next of Kin) அடுத்த உறவினர்களைப் பொறுத்தவரை தத்தெடுத்த மகன் அல்லது மகள், மாற்றுத்தந்தை மூலம் பிறந்த மகன்/மகள், மாற்றுத்தாய் வழிப்பட்ட மகன், மகள்களும் குடும்ப பென்ஷன் பெறலாம். அதற்கு விதியில் இடம் உண்டு. உடல் இயக்கமற்றுப்போன அல்லது மூளை வளர்ச்சி குன்றிய மகன், மகளும் இதில் அடங்குவர்.

பணியில் இருந்த ஊழியர் இறந்த பிறகு மகன்/மகள் உடல் இயக்கமற்றுப்போனாலும், ஊழியர் இறந்த பிறகு அவரின் மகள் விதவையானலும்/விவாகரத்தானலும் /25 வயதுக்குப் பிறகும் மணமாகாமல் இருந்தாலும், உயிரோடு இருக்கிற (இறந்து போன) ஊழியரின் மனைவி அல்லது கணவர் இவர்களைப் பற்றிய விவரத்தை, ஊழியர் பணியாற்றிய அலுவலகம் மூலம் தெரிவித்து, தனக்குப் பிறகு இவர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற வழி வகுக்கலாம்.

நிபந்தனை என்னவென்றால்… வயது வரம்பு 25 வயதுக்குள் இருக்க வேண்டும். திருமணம் அல்லது மறுமணம் ஆகாமலிருக்க வேண்டும். வருமான வரம்பு மத்திய அரசு ஊழியர்கள் மகன், மகள் எனில் ரூ.12,420-க்கு கீழ், தமிழக அரசு ஊழியரின் மகன், மகள் எனில் தற்போதைய நிலையில் (7850+2983) ரூ. 10833-க்கு கீழ் இருக்க வேண்டும்.

ஓய்வூதியம்

தத்தெடுப்பு வழக்கு

குழந்தை இல்லாத விதவை ஒருவர், தன் கணவர் இறந்த பிறகு, இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மகனை தத்தெடுத்தார். அந்த மகன் இந்து தத்தெடுப்பு பராமரிப்பு சட்டத்தின்படி தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வழக்கு தொடுத்தார். ஆனால், அவருக்கு குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. காரணம், ஊழியர் தனது வாழ்நாள் காலத்திலேயே தத்தெடுத்த பிள்ளைக்குத்தான் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி உண்டு. ஊழியர் இறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவர் மனைவி தத்தெடுத்த பிள்ளைக்கு குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லாமல் போய்விட்டது.

தீர்ப்பு பற்றி குறிப்பிட்ட நீதியரசர், ‘குடும்பம்’ என்பதற்கான விவரணை (Definition) குறுகிய வார்த்தை கொண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டார். அதாவது ‘தத்தெடுத்த பிள்ளை’ என்று தான் உள்ளதே தவிர, ‘ஊழியர் உயிரோடு உள்ளபோதே தத்தெடுத்த பிள்ளை’ என விரிவான விவரணை இல்லை. எனவேதான் உச்சநீதிமன்றம் வரை சென்றது வழக்கு. கோருகை குடும்ப ஓய்வூதிய விதிக்கு முரணாக இருந்ததால் வழக்கு தோற்றுப்போனது. கணவர் இறந்த பின்னர் பிறந்த குழந்தை, அதாவது, கணவர் உயிரோடு இருந்தபோது மனைவி கருவுற்றிருந்து, கணவர் இறந்த பிறகு பிறக்கும் குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் உண்டு என்ற விதி உள்ளது. மேற்குறிப்பிட்ட வழக்கில், இதனை நீதியரசர்கள் உறுதி செய்துள்ளனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு

ராணுவப் பணியினர் தங்களது பணிக்காலத்தில் இறந்து போனால், அந்த மனைவி, இறந்து போன கணவரின் சகோதரரை மணந்து கொண்டாலும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம் என்பது விதி. இது ராணுவத்தினருக்கானது மட்டுமே, குடிமைப்பணியினருக்கானது அல்ல. ராணுவத்தில் குடிமைப்பணியினரும் உண்டு. அவ்வாறு ராணுவ குடிமைப்பணியில் (Ex Civilian employee) இருந்தபோது ஒருவர் இறந்து போனார். அவரின் மனைவி கணவரின் சகோதரரை மணந்து கொண்டார். இந்த வழக்கில் அந்தப் பெண், குடும்ப ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறலாம். அவர் `தனது சமூகத்துக்கான வாழ்க்கை முறையை கைகொண்டு, இதர வாரிசுகளைப் பராமரிக்க வேண்டும்’ என்பதே நிபந்தனை.

அதாவது, `ராணுவப் பணியில்’ இறந்தவர் என்பதும், குடிமைப்பணியில் இறந்தார் என்பதும் ஒன்றே என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கான உயர்நீதிமன்றம். அதாவது விதியை மட்டும் பாராமல், `நியதி’ யையும் சார்ந்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

judgement

குடிமைப்பணியில் (Civil Service) இருந்த ஊழியர் இறந்து போய், குழந்தை இல்லாத நிலையில் அந்தப் பெண் மறுமணம் செய்து கொண்டால், அவருக்கு குடும்ப ஓய்வூதியம் தொடரும். நிபந்தனை என்னவென்றால், மறுமணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது. அதாவது இன்றைய தேதியில் ஓய்வூதியம் 9000 + அகவிலைப்படி 3420=12420 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது என்பதே.

இதே நிபந்தனையின் அடிப்படையில், ஊழியர் இறந்துபோன தருணத்தில் சட்டபூர்வமாக பிரித்து வைக்கப்பட்ட மனைவியும் குடும்ப ஓய்வூதியம் பெறலாம். வருமான நிபந்தனையுடன், அவர் ஒழுக்கமற்றவர் (Adultery) என்ற காரணத்துக்காகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கலாகாது என்பது கூடுதல் நிபந்தனை. எனவே விதிகளில் தெளிவுபெற்று நீதிமன்றம் சென்றால், வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெறலாம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.