நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் பகிர்வுக்கு கட்டணம்; ஏப்ரல் முதல் அமல்.!

உலகெங்கிலும் உள்ள பல நெட்ஃபிளிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள், இதனால் அவர்கள் ஸ்ட்ரீமிங் தளத்தில் உள்ளடக்கத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இங்கிலாந்தில் உள்ள அறிவுசார் சொத்து அலுவலகம் (ஐபிஓ), இந்த நடைமுறை அத்தகைய பயனர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை பதிவு செய்யலாம் என ஏற்கனவே எச்சரித்து இருந்தது.

ஸ்ட்ரீமிங் கணக்குகளுக்கான கடவுச்சொல் பகிர்வு “இரண்டாம் நிலை பதிப்புரிமை மீறல்” என்றும் கூறியுள்ளது. பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் சந்தாதாரர்களை பணம் செலுத்த நிர்பந்திக்கும், நெட்ஃபிளிக்ஸின் அதிகரித்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாஸ்வேர்ட் பகிர்வுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும் என்று நெட்ஃபிளிக்ஸ் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில், “அனுமதியின்றி உங்கள் சமூக ஊடகங்களில் இணையப் படங்களை ஒட்டுவது, அல்லது சந்தா செலுத்தாமல் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்வது, ஹேக் செய்யப்பட்ட ஃபயர் ஸ்டிக்ஸ் அல்லது பயன்பாடுகள் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் அல்லது நேரடி விளையாட்டு நிகழ்வுகளை அணுகுவது பதிப்புரிமை மீறல். அதனால் நீங்கள் ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டது.

தேவைப்பட்டால் நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுப்பது ஸ்ட்ரீமிங் நிறுவனத்தை சார்ந்தது என்றும் ஐபிஓ கூறியுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஏற்கனவே பல்வேறு நபர்களுடன் தங்கள் கடவுச்சொற்களைப் பகிர்ந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் முதல் காலாண்டு முடிவுகளை அறிவித்த நெட்ஃபிளிக்ஸ், உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் பகிரப்பட்ட பாஸ்வேர்டைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது. இது அதன் வருவாயை கடுமையாகப் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 222 மில்லியன் குடும்பங்கள் தனது சேவைக்கு பணம் செலுத்தும் நிலையில், தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவைக்கு பணம் செலுத்தாத 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுடன் கணக்குகள் பகிரப்படுகின்றன என்று ஸ்ட்ரீமிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத பயனர்கள் மற்றவர்களின் கணக்குகளை முடக்குவதைத் தடுக்க, நிறுவனம் கடந்த ஆண்டு கணக்கு சரிபார்ப்புக் கருவியை பரிசோதித்தது.

இந்தநிலையில் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் சந்தாதாரர்களிடம் இருந்து வருகிற ஏப்ரல் மாதம் முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகுவதாகவும், ஸ்ட்ரீமிங் சேவையின் கட்டுப்பாட்டை அவரது நீண்டகால கூட்டாளியும் இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான டெட் சரண்டோஸ் மற்றும் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கிரெக் பீட்டர்ஸ் ஆகியோரிடம் ஒப்படைப்பதாகவும் நிறுவனம் அறிவித்தது. மேலும் ஹேஸ்டிங்ஸ் நிர்வாக தலைவராக பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்வேர்ட் பகிர்வு பற்றி புதிய தலைவர் ஹேஸ்டிங்ஸ் கூறும்போது, ‘‘ஏற்கனவே லத்தீன் அமெரிக்க நாடுகளான சிலே, கோஸ்டா ரிகா, பெரு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தை தடை செய்தவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் மேற்கூறிய நாடுகளில் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ள நினைக்கும் நபர்கள் 3 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு படி சுமார் 250 ரூபாய்) கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பாஸ்வேர்ட் பகிர்ந்து கொள்வது படிப்படியாக தடை செய்யப்படும். பாஸ்வேர்ட் ப்கிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடைமுறை 2023 நிதி ஆண்டின் முடிவில், அதாவது ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.