பிரதமர் குறித்த பிபிசி ஆவணப் படத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்துக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பல்துறை பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தது. அதுபற்றியும், அந்த கலவரத்துக்கும் அப்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பது போன்றும் ‘இந்தியா – மோடி கொஸ்டியன்’ என்ற தலைப்பிலான ஆவணப்படத்தில் கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் 13 முன்னாள் நீதிபதிகள், 133 ஓய்வு பெற்ற தூதரக உயரதிகாரிகள், 156 ராணுவ உயரதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஆவணப் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் தவறான, பாரபட்சமானதாக உள்ளது. மேலும், இந்திய சுதந்திரத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்கும் ஆவணப்படமாக உள்ளது. இந்தியா மீதான பாரபட்சமான அணுகுமுறையை மீண்டும் வெளிப்படுத்துவதாக பிபிசி.யின் ஆவணப்படம் உள்ளது.

மேலும், ‘பரவலாக பேசப்பட்ட செய்திகள்’, ‘நம்பத் தகுந்த வட்டாரங்கள்’ என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்தி கூறியுள்ளனர். கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி தீர்ப்பளித்துள்ளது.

இந்த ஆவணப் படம் எங்களது நாட்டின் தலைவருக்கு எதிராக உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. தேசப்பற்றுள்ள, ஒரு இந்திய குடிமகனால், வேண்டுமென்றே திரிக்கப்பட்டு வெளியிடப்படும் ஆவணப் படங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

இந்த அறிக்கையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அனில் தயோ சிங், உள்துறை முன்னாள் செயலர் எல்எஸ்.கோயல், ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிபாதி, தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) முன்னாள் தலைவர் யோகேஷ் சந்தர் மோடி, உ.பி. முன்னாள் டிஜிபி ஓபி சிங் உட்பட முக்கிய பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.