கேரளா: காலாவதி தேதியில்லாத உணவு பாக்கெட்டுகளுக்கு தடை; சுகாதாரத்துறையின் அதிரடி தொடர்கிறது!

கேரளாவில், காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறாத உணவுப் பாக்கெட்டுகளை விற்க, அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

கேரளாவில், உணவின் தரம் தொடர்பான பிரச்னைகளால் அடுத்தடுத்து உயிர்பலி, மக்களுக்கு உடல்நல பாதிப்புகள் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் எர்ணாகுளம் மாவட்டம் வடபரவூரில் உள்ள உணவகத்தில் உணவு உண்ட 68 பேர் உணவு நச்சு அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

உணவு | மாதிரிப்படம்

ஜனவரி 2-ம் தேதி, கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் பெண் செவிலியர் ஒருவர், கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து உணவை உட்கொண்ட பிறகு உடல் நலம் பாதித்து உயிரிழந்தார். தொடர்ந்து, அவருடன் அதே உணவகத்தில் சாப்பிட்ட 21 பேர் நோய்வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைகளுக்குப் பின் குணமடைந்தனர். இதையடுத்து உணவகம் மூடப்பட்டதுடன், அதன் தலைமை சமையல்காரர் மற்றும் உரிமையாளர் ஆகியோரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், உணவகங்களில் திடீர் ஆய்வு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் கடைகள் மற்றும் உணவகங்களில் விற்கப்படும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களில் காலாவதி தேதி குறித்த விவரங்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய விவரங்கள் இடம் பெறாத உணவு பாக்கெட்டுகளின் விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என்று கேரளா சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Food

மேலும், `உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிகளின்படி, சூடான உணவுகள் என வகைப்படுத்தப்பட்ட உணவுகள், சமைத்த இரண்டு மணி நேரத்திற்குள் உட்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய உணவை அதிக பயண நேரம் எடுக்கும் இடங்களுக்கு எடுத்துச் செல்லும்போது கூட வெப்பநிலை 60 டிகிரியில் பராமரிக்கப்பட வேண்டும். இந்த உணவுகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக அறை வெப்பநிலையில் வைக்கப்படும் போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உண்ணுவதற்கு தகுதியற்றதாக மாறும். எனவே, சில கட்டுப்பாடுகள் அவசியம் என்று கண்டறியப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.