ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு… நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, உடல்நலக்குறைவால் கடந்த ஜன. 4ஆம் தேதி மறைந்தார். அவரின் மறைவைக்கு பின் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியது. 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்.27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில், திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள், தேமுதிக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவையில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, இம்முறை தேர்தலை சந்திக்கப்போவதில்லை என்றும் அதிமுக உள்பட யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பாஜக தரப்போ அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறது.  

இதில், அதிமுகவின் இரு அணிகளும் இடைதேர்தலை சந்திக்க உள்ளதால், யாருக்கு யார் ஆதரவு என்று பெரும் குழப்பம் நிலவிவருவதாக தெரிகிறது. இரு தரப்பும் வேட்பாளரை தேர்வு செய்ய மும்முரமாக இருந்த வரும் வேளையில், மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக திமுக கூட்டணி அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, தொகுதியை தக்கவைக்க அக்கட்சியினர் பரப்புரையையும் தொடங்கிவிட்டன.  

அந்த வகையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார். மேலும், கமல்ஹாசன் தங்களுக்கு ஆதரவளிப்பார் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தல் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக அக்கட்சியன் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன. 25) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அவர் அறிவித்தார். 

அப்போது அவர்,”காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிக்காக நானும் கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம். ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது. கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.

கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,”நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, வெற்றி பெற்ற தொகுதி என்றாலும், காங்கிரஸ் அதனை தக்கவைக்க கடுமையாக பணியாற்றிவரும் நிலையில், கமல்ஹாசனின் ஆதரவு பெரும் ஊக்கத்தை அளிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.