வரும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் ஸ்பெஷல்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பிரதான கோயிலான மலைக் கோயில் குடமுழுக்கு விழா வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 27) அன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்த அபிஷேகம் நடத்தப்படும்.

கும்பாபிஷேக விழா

இதையடுத்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெறும். இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இணையதளம் வாயிலாக 51,295 பக்தர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 58 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகள், விவிஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் என ஆயிரம் பேர் மட்டும் ரோப் கார், மின் இழுவை ரயில் மூலம் அனுமதிக்கப்படுவர்.

சிறப்பு ஏற்பாடுகள்

மற்றவர்கள் படிப்பாதை வழியாக மட்டும் செல்ல வேண்டும். மூன்று இடங்களில் 70 ஆயிரம் பேர் வரை சாப்பிடும் அளவிற்கு அன்னதான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தை ஒட்டி பழனி – தாராபுரம் சாலையில் அமைக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பழனி நகருக்குள் வர கட்டணமில்லா சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் வருகை

வழக்கமாக திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பழனியில் உள்ள முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை புரிவர். இந்த சூழலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதால் கூட்டம் அலைமோதும். பழனியில் விண்ணை பிளக்கும் அளவிற்கு அரோகரா கோஷம் எழும்பும். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது.

உள்ளூர் விடுமுறை

இந்நிலையில் பழனி தண்டாயுதபாணி சாமி திருக்கோயிலின் பிரதான கோயிலான மலைக் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சார்பில் தமிழ்நாடு அரசின் பொது பல்வகைத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை ஏற்று வரும் 27ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுவதற்கு மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வுகள் தடையின்றி நடக்கும்

அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 27ஆம் தேதியில் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்று வேலை நாள்

இந்த அரசு விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் பிப்ரவரி 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்கள் உடன் செயல்பட உரிய ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.