பட்ஜெட்டில் எதெற்கெல்லாம் வரிச்சலுகைகள்?.. நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகள் என்ன?

இன்னும் இரண்டு நாட்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், நடுத்தரவர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, பிப்ரவரி 1ஆம் தேதி சமர்ப்பிக்க உள்ளார். மேலும் தற்போதைய பிரதமர் மோடி அரசின் கடைசி முழுபட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, அடித்தட்டு மக்கள், தொழில்துறையினர், ஊதியம் பெறுவோர் எனப் பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்பார்த்து உள்ளனர். முந்தைய பட்ஜெட்களைப் போலவே, 2023-24ஆம் ஆண்டுக்குரிய மத்திய பட்ஜெட்டும் காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் தகவல் தொழில் நுட்பம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, உற்பத்தி, மக்கள் நலத் திட்டங்கள், வரிவிலக்கு உள்ளிட்ட துறைகளில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
image
நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் வரி விலக்கு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நடுத்தர வர்க்கத்தினரிடம் நிலவி வருகிறது. தனிப்பட்ட வரி செலுத்துவோர், நேரடி வரி வசூலில் முக்கிய பிரிவாக இருக்கும் நிலையில், அதிக வரிச் சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கின்றனர். இது, கூடுதல் செலவினங்களை சமாளிக்க, நடுத்தர மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தனி நபரும் ஒரே வருமான வரி அடுக்கு விகிதங்களுக்கு உட்பட்டிருப்பதால், பெண்களுக்கு தனித்துவமான வருமான வரி அடுக்குகள் அல்லது விலக்கு சலுகைகள் இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வீட்டு வாடகையில் மெட்ரோ நகரங்கள் வரையறையிலும் சொந்த வீடு வாங்குவதை சாத்தியமாக்க கூடுதல் வருமான வரி சலுகையிலும் மாற்றம் தேவை என நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர். வீட்டுக்கடன் போலவே, தனிநபர் கடன் மற்றும் மருத்துவக் காப்பீட்டிலும் வரிச் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர். அதாவது கல்விக்கடன் வட்டிக்கு வருமான வரிச் சலுகை இருப்பதுபோல இவற்றுக்கும் வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
image
மேலும், தனிநபர் வருமான வரிச் சலுகையை ரூ.2.5 லட்சத்தில் இருந்து குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் – ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அதுபோல், தற்போது ரூ.50,000-ஆக இருக்கும் நிலையான விலக்கு வரம்பு ரூ. 1லட்சமாக உயர்த்தப்படும் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது. மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியத்திற்கான 80டி வரம்பையும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்ய (WFH), வீட்டிலேயே அலுவலக அமைப்பை உருவாக்கும் தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு சில நிவாரணங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு இந்த போக்கு அதிகமாகியுள்ளதால், இதில் சலுகைகளுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.