டெஸ்ட் போட்டியில் மீண்டும் ஆடுவது எப்போது? – ஹர்திக் பாண்ட்யா பதில்

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது;-

“நான் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எனது அணிக்கும், சக வீரர்களுக்கும் அமைதியையும், நான் களத்தில் உறுதுணையாக இருக்கிறேன் என்ற நம்பிக்கையையும் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் கவனம் செலுத்துகையில் எனது ‘ஸ்டிரைக் ரேட்’ குறையலாம். புதிய வாய்ப்புகளையும், புதிய பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள எப்பொழுதும் தயாராக இருக்கிறேன். டோனி பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டது போல் நானும் அணிக்கு பங்களிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

முன்பு நான் சிக்சர் அடிப்பதில் ஆர்வமாக இருந்தேன். தற்போது டோனி அணியில் இல்லாததால் எனக்கு திடீரென பொறுப்புகள் வந்துள்ளன. அந்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதில் கவலையில்லை. ஆட்டத்தில் நாங்கள் விரும்பிய முடிவுகள் கிடைக்கின்றன. எனவே இது சரி தான்.

எல்லா வடிவிலான போட்டியிலும் ஆடக்கூடிய தொழில்நுட்பம் சுப்மன் கில்லுக்கு இருக்கிறது. சிரமமின்றி சிறப்பான ஷாட் ஆடும் திறமை அவரிடம் உள்ளது. இளம் வீரரான அவர் எல்லா வடிவிலான ஆட்டங்களிலும் ஆடுவது புதிய பரிமாணத்தை கொடுக்கும்.

தற்போது எனது கவனம் எல்லாம் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி மீது தான் உள்ளது. அது தான் முக்கியமானது. எனது உடல் தகுதி நன்றாக இருப்பதாக உணரும் தருணத்தில் டெஸ்ட் போட்டிக்கு திரும்ப முயற்சிப்பேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

முதுகு வலி பிரச்சினைக்கு கடந்த 2019-ம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹர்திக் பாண்ட்யா 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.