Live In Relationship: லிவ்-இன் ரிலேஷன்ஷிப் அட்ராசிட்டி! அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்

அகமதாபாத்: காதல், திருமணம், திருமணம் செய்துக் கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்வது, ஓரின சேர்க்கை, திருமணம் தாண்டிய உறவு என பல விஷயங்கள் இன்றும் விவாதப் பொருளாக இருக்கின்றன. அதில் லிவ்-இன் என்ற அக்ரிமெண்டின் அடிப்படையில் கணவரிடம் இருந்து காதலியை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள முயன்ற ஒருவருக்கு  குஜராத் உயர்நீதிமன்றம் ரூ.5,000 அபராதம் விதித்தது.

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் உயர்நீதிமன்றத்தை அணுகி, தன்னுடன் இருக்கும் பெண்ணுடன் தான் வாழ்வதாகவும், ஆனால், அவளது விருப்பத்திற்கு மாறாக வேறொரு நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக தெரிவித்தார். திருமண உறவும், குடும்பமும் பிடிக்காததால், அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வசிப்பதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்ற ஒப்பந்தத்தை உருவாக்கி கையெழுத்திட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் கணவர் குடும்பத்தினர் மற்றும் மாமியார் வந்து மீண்டும் தன்னிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்றுவிட்டதாக, அந்த நபர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

வித்தியாசமான இந்த வழக்கில் அந்த நபர் தாக்கல் செய்திருந்தது ’ஹேபியஸ் கார்பஸ் மனு’ என்பது குறிப்பிடத்தக்கது. தனது காதலி, தன்னுடைய கணவரின் சட்டவிரோத காவலில் இருப்பதாகவும், அவரது விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் தனது மனுவில் மனுதாரர் தெரிவித்திருந்தார்.

எனவே, தனது காதலியை அவரது கணவரிடம் இருந்து பிரித்து, ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த மனுவை எதிர்த்த மாநில அரசு, அத்தகைய மனுவை தாக்கல் செய்ய அந்த நபருக்கு இடம் இல்லை என்று வாதிட்டது. பெண் கணவனின் காவலில் இருந்தால், அவள் சட்ட விரோத காவலில் இருக்கிறாள் என்று சொல்ல முடியாது என்று அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.பஞ்சோலி மற்றும் நீதிபதி எச்.எம்.பிரச்சக் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரருக்கு திருமணம் இதுவரை நடைபெறவில்லை என்றும், அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது.

கணவரின் காவலில் மனைவி இருப்பது என்பது, மனுதாரர் கூறுவது போல் சட்டவிரோத காவல் கிடையாது. எனவே, இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை இல்லை என்றும் நாங்கள் கருதுவதாக நீதிமன்ற அமர்வு தெரிவித்தது. மேலும் மனுதாரருக்கு ரூ. 5,000 அபராதம் விதித்த நீதிபதிகள், இந்த அபராதத் தொகையை, மாநில சட்ட சேவைகள் ஆணையத்திற்கு கொடுக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.