IPL 2023 Preview: `ஒசரட்டும் பத்து தல…'- சாம்பியனாக தோனிக்கு விடைகொடுக்குமா சிஎஸ்கே?

வரவிருக்கும் ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பரபரப்பாக இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தப் பயிற்சிகளின் ஒரே ஒரு செஷனில் மட்டும் ரசிகர்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டது. வெறுமென பயிற்சிதான். ஆனால், அதற்கே ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள்.

அங்கு கூடியிருந்த அத்தனை ரசிகர்களின் மனதிலும் ஒரே ஒரு கேள்வியும் ஏக்கமும்தான் அதிகம் குடிகொண்டிருந்தது. அது, சிஎஸ்கே மீண்டும் சாம்பியனாகுமா என்பதே!

2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் பெரும் வீழ்ச்சியிலிருந்து சிஎஸ்கே மீண்டு வந்து சாம்பியனாகியிருந்தது. அதேபோன்றதொரு சம்பவத்தை சிஎஸ்கே இந்த சீசனிலும் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ரசிகர்களின் எண்ணம் ஈடேறுமா?

ஜடேஜா, தோனி, ராயுடு | MI vs CSK

ஐ.பி.எல் இல் இதுவரை 15 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இந்த 15 சீசன்களில் 13 சீசன்களில் சிஎஸ்கே ஆடியிருக்கிறது. இந்த 13 சீசன்களில் சிஎஸ்கேவின் மோசமான சீசன் எதுவென்றொல் 2020 துபாய் சீசன்தான் முதலில் ஞாபகம் வரும். ஏனெனில், அந்த சீசனில்தான் சிஎஸ்கே முதல்முதலாக ப்ளே ஆஃப்ஸூக்கே தகுதிப்பெறாமல் வெளியேறியிருந்தது. ஆனால், ரிசல்ட் அடிப்படையில் பார்த்தால் அந்த 2020 சீசனை விட 2022 சீசன்தான் சிஎஸ்கேவிற்கு அதி மோசமானதாக அமைந்திருந்தது. 2020 சீசனில் கூட சிஎஸ்கே 14 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் வென்றிருந்தது. ஆனால், கடந்த சீசனில் 14 போட்டிகளில் ஆடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது. ஆக, சிஎஸ்கேவின் மோசமான சீசன் கடந்த சீசன்தான். அந்த வீழ்ச்சியிலிருந்து சிஎஸ்கே இந்த சீசனில் மீண்டு வர வேண்டும். அதுதான் சிஎஸ்கேவிற்கான டாஸ்க். கடந்த சீசனில் சிஎஸ்கே எங்கேயெல்லாம் சொதப்பியது என்பதை அறியும்போதுதான் இந்த சீசனில் சிஎஸ்கே எங்கேயெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

முதல் விஷயம், கடந்த முறை கேப்டன்சியிலேயே எக்கச்சக்க குழப்பங்கள் இருந்தன. சீசன் தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகி ஜடேஜா கேப்டனாக்கப்பட்டார். என்னதான் ஜடேஜா கேப்டனாக இருந்தாலும் தோனிதான் முடிவுகளை எடுப்பதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தார். தோல்விகள் தொடரவே, ஒரு கட்டத்தில் ‘கேப்டன்சியை ஸ்பூனில் வைத்து ஊட்ட முடியாது’ எனக் காட்டமாக ஜடேஜாவை விமர்சித்துவிட்டு தோனியே மீண்டும் கேப்டனானார். அதன்பிறகு, ஜடேஜாவிற்கும் சிஎஸ்கேவுக்குமான உறவிலேயே சிக்கல் எழுவதைப் போன்று இருந்தது. அதன்பிறகு, தோனியே தலையிட்டு எல்லாம் சுமூகமாக முடிந்தது.

Ravindra Jadeja

கேப்டன்சி விஷயத்தில் இந்த மாதிரியான குழப்பங்கள் எதுவும் இந்த முறை எழுவதற்கான வாய்ப்பில்லை என்பதே பெரும் ஆறுதல்தான். தோனியேதான் முழுமையாக கேப்டனாக இருக்கப்போகிறார். அடுத்தடுத்த சீசன்களுக்கு யார் கேப்டன் என்பது இந்த சீசனுக்குப் பிறகு விவாதிக்கப்பட வேண்டியது.

2021-ல் சென்னை அணி சாம்பியனானதற்கு மிக முக்கிய காரணம் அதன் ஓப்பனிங் கூட்டணி. டூப்ளெஸ்ஸிம் ருத்துராஜூம் நின்று கதகளி ஆடியிருந்தார்கள். ஒரே அணிக்குள் இருந்துக்கொண்டு ஆரஞ்சு தொப்பிக்காக இரண்டு பேரும் தனித்தனி யுத்தமே நடத்தியிருந்தார்கள்.

Ruturaj Gaikwad

அப்படியொரு ஓப்பனிங் கூட்டணி கடந்த முறை செட் ஆகவில்லை. டூப்ளெஸ்ஸி பெங்களூர் அணிக்குச் சென்றுவிட்டார். ருத்துராஜ் கடந்த சீசனில் ஆடியதில் பாதியளவு கூட ஆட முடியாமல் ஃபார்மை இழந்து தடுமாறினார். சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு அதுவே முதல் காரணமாக அமைந்துபோனது.

ஓப்பனிங் சரியில்லையென்றால் அடுத்தடுத்த பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து ரன்களைச் சேகரித்து அணியின் வெற்றிக்கு உதவியிருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை. கடந்த சீசனில் சிஎஸ்கேவின் எந்த பேட்டருமே 400 ரன்களை கூடத் தாண்டவில்லை. அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 368 ரன்களை எடுத்திருந்தார். அதே கெய்க்வாட் 2021 சீசனில் 635 ரன்களை எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். ஓப்பனிங் சரியில்லை. மொயீன் அலி, கான்வே, அம்பத்தி ராயுடு, உத்தப்பா, தோனி என அத்தனை பேட்டர்களுமே தங்களின் வழக்கத்தை விட ரொம்பவே சராசரியாகத்தான் ஆடியிருந்தனர்.

கடந்த சீசனில் சிஎஸ்கேவை விட மும்பை அணி மோசமாக ஆடியிருந்தது. புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவிற்கு 9வது இடம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 10வது இடம். அவ்வளவு மோசமாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியிடமே சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. சிஎஸ்கேவின் பேட்டிங் பெர்ஃபார்மென்ஸ் கடந்த ஆண்டு இப்படித்தான் இருந்தது.

பேட்டிங்கிற்கு சற்றும் சளைக்காத வகையிலேயே சிஎஸ்கேவின் பௌலிங்கும் இருந்தது. பவர்ப்ளே மற்றும் டெத் இரண்டிலுமே பயங்கர மோசமாக சிஎஸ்கேவின் பௌலர்கள் வீசியிருந்தனர். சிஎஸ்கேவின் பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட்டாக அறியப்பட்ட தீபக் சஹார் காயம் காரணமாக சீசனிலிருந்து விலகவே, இரண்டு மூன்று சீசன்களாக பவர்ப்ளேக்குள் பந்தை கையிலேயே வாங்கியிராத ப்ராவோவை அழைத்து தோனி ஓவர் கொடுத்தார். அந்தளவுக்கு பவர்ப்ளேயில் சிஎஸ்கேவின் பந்துவீச்சு அடி வாங்கியிருந்தது. முகேஷ் சௌத்ரி, சிமர்ஜித் சிங் போன்றோர் சீசனின் பிற்பாதியில் ஜொலித்தாலும் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. ஸ்பின்னில் மஹீஸ் தீக்சனா மாதிரியான வீரர்கள் ஓரளவுக்கு நம்பிக்கைக் கொடுத்தனர்.

Ben Stokes

இந்த சீசனுக்கு முந்தைய மினி ஏலத்தில் சென்னை அணி பென் ஸ்டோக்ஸ் மாதிரியான வீரர்களை வாங்கி வைத்திருக்கிறது. தீபக் சஹார் காயத்திலிருந்து மீண்டு மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். ஜடேஜாவும் மனஸ்தாபங்களையெல்லாம் களைந்து தோனியின் கீழ் ஆட முழுமனதுடன் மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறார். அணியும் தங்களின் எமோஷனல் கோட்டையான சேப்பாக்கத்திற்கு மீண்டும் வந்திருக்கிறது.

தோனி

சேப்பாக்கம் மைதானத்திற்கென்றே பிரத்யேகமாக வியூகங்களை வகுத்து அணியை திறம்பட வழிநடத்தி வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதில் தோனியும் கில்லாடி. கான்வே – ருத்துராஜ் கூட்டணி, டூப்ளெஸ்ஸி – ருத்துராஜ் கூட்டணி போன்றே கச்சிதமான ஓப்பனிங்கைக் கொடுத்தே ஆக வேண்டும். இங்கிலாந்தின் உலகக்கோப்பை நாயகனான பென் ஸ்டோக்ஸ் அதே தாக்கத்தை இங்கேயும் ஏற்படுத்தி சிஎஸ்கேவின் வெற்றிக்கும் காரணமாக அமைய வேண்டும். மஹீஸ் தீக்சனா இலங்கையின் மேஜிக்கல் ஸ்பின்னர். அவர் சேப்பாக்கத்தில் ஆட எந்த சச்சரவும் எழாமல் இருக்கும்பட்சத்தில் சேப்பாக்கத்தில் ஆடப்போகும் 7 போட்டிகளிலும் மஹீஸ் தீக்சனா தனி முத்திரை பதிப்பார். கான்வே, மொயீன், ஸ்டோக்ஸ், மஹீஸ் தீக்சனா, பிரெட்டோரியஸ் எனப் பல முக்கியமான வீரர்கள் இருப்பதால் நான்கு வெளிநாட்டு வீரர்களை டிக் அடிப்பதில் குழப்பம் ஏற்படக்கூடும். இந்த சமயத்தில்தான் அந்த ‘Impact Rule’ விதி சிஎஸ்கேவிற்கு கைக்கொடுக்கக்கூடியதாக மாறலாம். மேலும், தோனி போன்று கேப்டன்சியில் பெரும் தடம்பதித்த ஒரு வீரர் இந்தப் புதிய விதியை எப்படிப் பயன்படுத்தி என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தப் போகிறார் என்பதுமே ஒரு நல்ல சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.

இரண்டாண்டு தடைக்குப் பிறகு சிஎஸ்கே 2018 இல் மீண்டு வந்து வந்த வேகத்திலேயே சாம்பியனானது. 2020 இல் அத்தனை பெரிய வீழ்ச்சிக்குப் பிறகு 2021 இல் விழுந்த வேகத்திலேயே மீண்டும் எழுந்தது.

தோனி

ஆக, வீழ்ச்சிகளும் கம்பேக்குகளும் சிஎஸ்கேவிற்கு ஒன்றும் புதிதானதல்ல. எல்லாம் பழக்கப்பட்டதுதான். `ஒசரட்டும் பத்து தல’யாக இந்த முறையும் கெத்தாக ஒரு கம்பேக்கை நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவை சிஎஸ்கேவிற்கு உருவாகியிருக்கிறது. ரசிகர்களும் அணியின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இருக்கலாம் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.