களக்காட்டில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பச்சையாறு அணை நீர்மட்டம் சரிந்தது: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

களக்காடு: களக்காட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 6.75 அடியாக சரிந்தது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. களக்காடு அருகே மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றியது.

இதன் எதிரொலியாக களக்காடு பச்சையாறு அணை நிரம்பவில்லை. அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். ஆனால் 17 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேங்கியது. கடந்த மாதம் (பிப்ரவரி) 24ம் தேதி அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. இதற்கிடையே களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் கடும் வெப்பம் நிலவும் நிலையில் அனல் காற்றும் வீசுகிறது. இதையடுத்து குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு வருகின்றன. அதுபோல பச்சையாறு அணையின் நீர்மட்டமும் சரிந்தது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 6.75 அடியாக இருந்தது. அணை-குளங்கள் வறண்டதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. எனவே கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கால்நடை வளர்ப்போர், அணை மற்றும் குளங்களில் ஆடு, மாடுகளை தண்ணீர் அருந்த ஓட்டி செல்வார்கள். தற்போது தண்ணீர் வற்றி வருவதால் ஆடு, மாடுகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு எழும் என்று கால்நடை வளர்ப்போர் கவலை தெரிவித்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.