மதுரை டைடல் பார்க்: ஆஹோ, ஓஹோன்னு வரப் போகுது… அமைச்சர் தங்கம் தென்னரசு தூள் பதில்!

தமிழக சட்டமன்றத்தில் இன்றைய கூட்டத்தொடரின் போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ, மதுரை மெட்ரோ ரயில் வருவதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாமல் மெட்ரோ திட்டம் வந்து என்ன பயன்? எனவே எல்லோரும் பாராட்டும் அளவிற்கு அமைச்சர் திட்டங்களை கொண்டு வர வேண்டும். மதுரை மக்கள் அனைவரும் ஆஹா, ஓஹோ என்று நமது தொழிற்துறை அமைச்சரை புகழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சபாநாயகர் அப்பாவு

உடனே கவுண்ட்டர் கொடுத்த சபாநாயகர் அப்பாவு, 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்துள்ளீர்கள். எதுவுமே கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறீர்கள். இந்த அமைச்சராவது தருவாரா? எனப் பார்க்கலாம் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்கள் மட்டுமல்ல. தமிழக மக்களே அண்ணனை பார்த்து ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்கம் தென்னரசு பதில்

நானே அசந்து போனேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் வந்தது. நாமெல்லாம் புலியை பார்த்தால் தூர ஓடிப் போவோம். மதுரையில் எல்லோரும் போய் மாட்டை தான் பிடிப்பார்கள். அண்ணன் செல்லூர் ராஜூ புலி வாலையே பிடித்துள்ளார். மதுரைக்காரங்க ரொம்ப விவரம் என்பது போல் புலி வாய் இருக்கும் பக்கம் செல்லாமல், வால் இருக்கும் பக்கமாக சென்று பிடித்துள்ளார்.

மதுரை டைடல் பார்க்

அப்படிப்பட்ட திறமை வாய்ந்த அண்ணன் செல்லூர் ராஜூ கேட்டிருக்கிறார். ஏற்கனவே தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, மதுரைக்கு 600 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பார்க் அறிவித்துள்ளோம். இதேபோல் மதுரையில் சிப்காட் ஒன்றும் வரவுள்ளது.

புதிய தொழிற்சாலைகள்

மேலும் மதுரை – தூத்துக்குடி வழித்தடத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மிகவும் நெருக்கடியான சூழல் காணப்படுகிறது. எனவே மற்ற மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை கொண்டு வர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது கிடைத்துள்ள தொழில் முதலீடுகள் தென் மாவட்டங்களை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது.

தென் மாவட்ட வளர்ச்சி

அந்த வகையில் மதுரைக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று தெரிவித்தார். புலி வாலை பிடித்த செல்லூர் ராஜூ எனப் பேசிய போது அவையில் சிரிப்பலை நீடித்தது. டைடல் பார்க் என்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டமாகும். சென்னையை அடுத்து பல்வேறு நகரங்களில் இத்தகைய வசதியை கொண்டு வர திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தென் மாவட்ட இளைஞர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் மதுரை டைடல் பார்க் அமையும் எனச் சொல்லப்படுகிறது. விரைவில் மதுரை ஐடி ஹப்பாக மாறிவிடும். இதையொட்டி பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளும் கிடைக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.