எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜெகதீஷ் ஷெட்டர் – டிக்கெட் நிராகரிக்கப்பட்டதால் விரக்தி

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பா.ஜனதா இதுவரை 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இன்னும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சமண் சவதி போன்றோருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை.

இதனால் கடும் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த லட்சுமண் சவதி பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துவிட்டார். அவரை தொடர்ந்து உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் ஜெகதீஷ் ஷெட்டர் தனக்கு மீண்டும் டிக்கெட் வழங்கியே தீர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். அவரை சமாதானப்படுத்தும் பணியில் பா.ஜனதா மேலிட தலைவர்களும், கர்நாடக பா.ஜனதா தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆனால் ஜெகதீஷ் ஷெட்டர், தனது தொகுதியில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருப்பதாகவும், அதனால் மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வேண்டி உள்ளதாகவும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

ஜெகதீஷ் ஷெட்டரின் இந்த நிலைப்பாட்டை பா.ஜனதா மேலிடம் ஏற்கவில்லை. கட்சியின் முடிவை தாங்கள் ஏற்றே தீர வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். தனக்கு டிக்கெட் கிடைக்காது என்று உறுதியான நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று காலை சிர்சிக்கு புறப்பட்டு சென்று அங்கு சபாநாயகர் காகேரியை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். பா.ஜனதா கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அவர் காங்கிரசில் சேருவது குறித்து பேச நேற்று இரவு பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று (திங்கட்கிழமை) ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் காங்கிரசில் சேரும் பட்சத்தில் உப்பள்ளி-தார்வார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.