சாம்சன், ஹெட்மயர் அதிரடி : 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

அகமதாபாத்,

ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சஹா 4 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய சாய் சுதர்சன் 20 ரன்னிலும், ஹர்த்திக் பாண்ட்யா 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து சுப்மன் கில்லுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் 45 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து அபினவ் மனோகர் மில்லருடன் இணைந்தார். அதிரடியில் மிரட்டிய மனோகர் 13 பந்தில் 27 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் சீரான ஆட்டத்தினை வெளிப்படுத்திய மில்லர் 46 (30) ரன்களுக்கு கேட்ச் ஆனார்.

இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளும், போல்ட், சாம்பா மற்றும் சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து பட்லர் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அடுத்து களமிறங்கிய பட்டிக்கல் 26 ரன்களும், ரியான் பராக் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

மறுமுனையில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 29 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில், 60 (32) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஹெட்மயருடன், துருவ் ஜுரல் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியில் ஹெட்மயர் அதிரடி காட்டி அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜுரல் 18 (10) ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அஸ்வின் அதிரடி காட்டி 10 (3) ரன்களில் கேட்ச் ஆனார். கடைசி ஒவரில் ஹெட்மயர் 25 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் ஹெட்மயர் 56 (26) ரன்களும், போல்ட் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ராஜஸ்தான் அணி 19.2 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷமி 3 விக்கெட்டுகளும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.