ஆஸ்கர் விருது பெறுவது முக்கியமல்ல – வெற்றிமாறன் பேச்சு

2023 ஆம் ஆண்டுக்கான தக்சின் மாநாடு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் வெற்றிமாறன், ரிசப் ஷெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் வெற்றிமாறன் பேசும்போது, கலைக்கு மொழியில்லை எல்லைகள் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் கலைக்கு மொழி கலாச்சாரம் எல்லைகள் உள்ளது. கலையானது அதன் எல்லைக்குள் இருந்து செயல்படும்போது அது கடந்து போகும். லாக்டவுன் நேரத்தில் நாம் அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தோம். என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்த நேரத்தில்தான் ஓடிடி தளங்களில் இருந்து எல்லா விதமான படங்களையும் பார்க்க தொடங்கினோம். அதன் மூலமாக அனைவருக்கும் வெவ்வேறு விதமான சினிமாவை பார்த்து அதைப்பற்றி புரிந்து கொள்வதற்காக ஒரு இடம் கிடைத்தது. லாக்டவுனுக்கு பிறகு தியேட்டருக்கு சென்று படம் பார்க்கத் தொடங்கினோம்.

கேஜிஎப், ஆர்ஆர்ஆர் , காந்தாரா போன்ற படங்கள் பெரிய வெற்றி பெறுவதற்கு காரணம் அவை அனைத்துமே அந்த மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள். அவர்களுடைய கலாச்சாரம், நடிகர்கள் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம், அதனால்தான் அந்த படங்கள் உலக அளவில் பிரபலமாகின . நம்முடைய கதைகளை நாம் சொல்லுகிறோம். ஆனால் அதற்கான உணர்வு எல்லை கடந்து ரீச் ஆகிறது. ஆஸ்கர் விருது வாங்குவது முக்கியமில்லை. நம் மக்களுக்கான படம் நாம் கொண்டாடுகிற படத்தை ஆஸ்கர் வரை கொண்டு சென்று அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதனைதான் நான் ஒரு புரட்சியாக பார்க்கிறேன்.

தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் குறும் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் காட்டப்பட்டுள்ள எமோஷன் அருமையாக உள்ளது. தென்னிந்திய படங்கள் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் நம்முடைய கதைகள், நமது மக்களுக்கான கதைகளை சொல்வதால் தான் அந்த தாக்கம் இருக்கிறது. நம்முடைய அடையாளங்களோடு தனித்துவங்களோடு பெருமைகளோடு படங்கள் எடுப்பதுதான் நம்முடைய வளர்ச்சிக்கு காரணம். மற்ற திரை உலகம் இதை பின்பற்றாததால்தான் பின்னடைவை சந்திக்கின்றன.

இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.