“ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தகக் கண்காட்சி” ஒக்டோபர் 20 முதல் 29 வரை

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக கண்காட்சி” தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் ஜனாதிபதி அலுலகத்தில் நேற்று (26) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

“ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக மன்றம் மற்றும் வர்த்தக கண்காட்சி” (UAE – Sri Lanka Business Forum and Trade Fair) 2023 ஒக்டோபர் 20 முதல் 29 வரை ஐக்கிய அரபு இராச்சிய RAK கண்காட்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

“தொற்றுநோய்க்குப் பின் உலகில், இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல்” என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை சம்மேளனம் மற்றும் இலங்கை சுற்றுலா கைத்தொழில் சபை இணைந்து இந்த வர்த்தக கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

ஜக்கிய அரபு இராச்சியம், வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார சூழலில், இலங்கை வர்த்தக நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதோடு ஐக்கிய அரபு இராச்சியம், வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நிறுவனங்களுக்கும் இலங்கை நிறுவனங்களுக்குமிடையில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இக்கண்காட்சி மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இலங்கையின் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவது இதன் மற்றொரு நோக்கமாகும்.

இந்த மாநாட்டை வெற்றியடையச் செய்வதற்கு இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் இலங்கை சுற்றுலா கைத்தொழில் சபை ஆகியவற்றிற்கும் தேவையான ஒத்தழைப்பை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் துறைசார் நிறுவன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மூலோபாய விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சாந்தனீ விஜேவர்தன, உட்பட அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை சம்மேளனம் மற்றும் இலங்கை சுற்றுலா கைத்தொழில் சபை ஆகியவற்றின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.