கேரளாவின் முதல் திருநம்பி பாடி பில்டர், `மிஸ்டர் கேரளம்' பிரவீன்நாத் தற்கொலை! – அதிர்ச்சி

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் திருநம்பி பிரவீன்நாத். பாடி பில்டரான பிரவீன்நாத் 2021-ல் நடைபெற்ற திருநம்பிகளுக்கான பாடி பில்டிங் போட்டியில் மிஸ்டர் கேரளம் என்ற பட்டத்தை வென்றார். 2022-ல் மும்பையில் நடைபெற்ற தேசிய பாடி பில்டர் போட்டியில் ஃபைனல் வரை சென்றார். கேரளத்தின் முதல் திருநம்பி பாடி பில்டர் என்ற பெருமைக்குச் சொந்தகாரர் பிரவீன்நாத். திருநம்பி பிரவீன் நாத்தும், மலப்புறம் மாவட்டம் கோட்டைக்கல் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ரிஷானா ஐஷூ-வும் காதலித்து வந்தனர். ரிஷானா ஐஷூ மாடலிங் துறையிலும் ஈடுபட்டுவந்ததுடன், மிஸ் மலபார் பட்டம் பெற்றுள்ளார்.

மனைவி ரிஷானாவுடன் பிரவீன் நாத்

திருச்சூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார் ரிஷானா. திருநம்பி பிரவீன்நாத், திருநங்கை ரிஷானா ஐஷூ ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தன்று பாலக்காட்டில் உள்ள டாப் இன் டவுண் ஆடிட்டோரியத்தில் வைத்து நண்பர்கள், உறவினர்கள் ஆதரவுடன் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடித்து உற்சாகமாக இருந்தனர். இருவரும் அவரவர் துறையில் சாதிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்தனர்.

முகநூல் பதிவில் பிரவீன்நாத் வெளியிட்ட போட்டோ

இந்த நிலையில் பிரவீன்நாத் – ரிஷானா ஐஷூ ஜோடிக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் தகவல் பரவியது. அந்த தகவல் பொய்யானது என தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார் பிரவீன் நாத். தனது முகநூல் பதிவில், “நானும் எனது மனைவியும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்ததாக நிறைய ஆன்லைன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாங்கள் இருவரும் பிரியவில்லை. ஒன்றாகவே வசித்து வருகிறோம். நாங்கள் பிரிந்ததாக ஒரு பதிவு போட்டுவிட்டு ஒருமணி நேரத்தில் டெலிட் செய்துவிட்டேன்.

அது எங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக போடப்பட்ட பதிவாகும். அதை எதற்காக இப்படி கொண்டாடுகிறீர்கள் என தெரியவில்லை. என்ன ஆனாலும், இனி நாங்கள் பிரிந்துவிட்டதாக செய்தி வெளியிட வேண்டாம். நாங்கள் நல்ல முறையில் வாழப்போகிறோம்” என கூறியிருந்தார்.

திருநம்பி பிரவீன் நாத்

இந்த நிலையில் திருச்சூர் பூங்குந்நத்தில் உள்ள வீட்டில் வைத்து விஷம் சாப்பிட்ட நிலையில் பிரவீன் நாத் மீட்கப்பட்டுள்ளார். அவரை திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.