“மதுவிலக்குத் துறையை என் கண்காணிப்பில் விடுங்கள்… சாராயத்தை ஒழித்து காட்டுகிறேன்” – முதல்வருக்கு அன்புமணி சவால்

விழுப்புரம்: “சமூக அக்கறை இல்லாத மதுவிலக்குத் துறை அமைச்சரை மாற்றவேண்டும். அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றவேண்டும். இந்த தலைமுறை மது இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கியுள்ளன” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் கடந்த 13-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் திங்கள்கிழமை மாலை வரை 13 பேர் உயிரிழந்தனர். 40 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று மாலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “இச்சம்பவத்தை அரசின் தோல்வியாக பார்க்கிறேன். மதுவிலக்கை அமல்படுத்த பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். கள்ளச் சாராயத்தை தடுக்க இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச் சாராயம் காவல் துறை, வருவாய்துறை மற்றும் அரசியல் கட்சிகளுக்கு தெரியாமல் ஒரு சொட்டுக் கூட விற்க முடியாது. தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தை உருவாக்கியதற்கு காரணமே கள்ளச் சாராயத்தை நிறுத்தியதால்தான். ஒரு பக்கம் கள்ளச் சாராயம் மற்றொன்று உரிமம் பெற்று விற்கும் சாராயமாகும். கடந்த ஒரு ஆண்டில் டாஸ்மாக் மதுவினால் தமிழகத்தில் 5 லட்சம் பேர் இறந்துள்ளனர். நாம் இப்போது இறந்ததைப் பற்றி பரபரப்பாக பேசுகிறோம்.

தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மதுவே குடிக்க இயலாத சூழலில் மீனவர்கள், விவசாயிகள் , கூலி தொழிலாளிகள் வாழமுடியாது என்ற நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கியுள்ளது. ஒருவர் டாஸ்மாக் மதுவை குடிக்கவேண்டும் என்றால் ரூ.250-லிருந்து ரூ.300 வரை செலவிடவேண்டும். ஆனால் கள்ளச் சாராயத்திற்கு ரூ.50 செலவிட்டால் போதும். தமிழகத்தில் உள்ள மதுவிலக்குத் துறை அமைச்சர் மதுவை திணிக்கிறார். அரசு இயந்திரத்தின் மூலம் மது திணிக்கப்படுகிறது. சமூக அக்கறை இல்லாத மதுவிலக்குத் துறை அமைச்சரை மாற்றவேண்டும். அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்றவேண்டும். இந்த தலைமுறை மது இல்லாமல் வாழமுடியாது என்ற நிலையை திராவிடக்கட்சிகள் உருவாக்கியுள்ளது.

தமிழக அரசு மதுவிலக்கு தொடர்பாக என்ன செய்யப்போகிறது என்பதை விளக்கவேண்டும். உணர்வுபூர்வமாக மதுவிலக்கை கொண்டுவரவேண்டும். தமிழகத்தில் ஏற்படும் விரும்பத்தகாத விவகாரங்களுக்கு காரணம் மதுதான். அரசு விற்கும் மதுவால் கள்ளச் சாராய இறப்பை விட ஆயிரம் மடங்கு அதிகம். தமிழகத்தில் 24 மணி நேரமும் சந்துக்கடைகளில் எல்லாம் மதுவிற்கப்படுகிறது. டாஸ்மாக் மதுபானம் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. இது மிகப் பெரிய ஊழலாகும். எல்லாம் நடந்த பிறகு நேரில் வந்து முதல்வர் பார்ப்பதில் பயனில்லை. நடக்காமல் தடுப்பதுதான் அரசின் கடமையாகும்.

தமிழகம் மற்றும் ஜிப்மரில் கூட Methyl alcohol poisoning antidote என்ற மருந்து இல்லை. அது இருந்திருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். அந்த மருந்து வெளிநாடுகளில் உள்ளது. தமிழகத்தில் சாராயம் இருக்கக் கூடாது என்று முதல்வர் கூறியிருந்தால், மதுவிலக்குத் துறையை என் கண்காணிப்பில் விடுங்கள். அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவேன். மதுவிலக்கை குஜராத், பிஹாரில் நடைமுறைபடுத்தும்போது இங்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாது?” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.