அமித் ஷா தமிழகம் வந்ததற்கும் செந்தில்பாலாஜி கைதுக்கும் தொடர்பு இல்லை – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: அதிமுக – பாஜக கட்சிகளிடையே பேச்சளவில் கருத்து வேறுபாடு இருந்தாலும், கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கதுறை நடவடிக்கைகள் பழிவாங்கும் நடவடைக்கையல்ல. வருமான வரித்துறையின் சோதனையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப் பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. 3 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு. உச்ச நீதிமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதிமன்றம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்ததை அடுத்து தான் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

ஏற்கனவே வருமான வரித்துறை செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் சோதனை செய்யப்பட்ட பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது வருமானவரித்துறை அதிகாரிகள் தலைமை செயலகத்தில் சோதனை செய்தபோது திமுக என்ன சொன்னது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது மாற்றிச்சொல்கிறார்கள்.

தற்போதைய தமிழக முதல்வரே செந்தில் பாலாஜி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகத்துக்கு வந்ததற்கும் தற்போது உள்ள நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அதிமுக – பாஜக கட்சிகளுக்கு இடையே பேச்சளவில் கருத்து வேறுபாடு வந்துள்ளது. கூட்டணிக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். எனினும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக எந்த கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை 3 பேரும் சேர்ந்து தான் முடிவு எடுப்பார்கள். கூட்டணி குறித்த இறுதி முடிவை அதிமுக பொதுச்செயலாளர், பிரதமர், அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் கூட்டாக சேர்ந்து முடிவு செய்வார்கள்.

முன்பு தமிழர் ஒருவர் பிரதமராக வரும் வாய்ப்பு இருந்து, எப்படி தவறி போனது என்பதை அனைவருக்கும் தெரியும். அகில இந்திய அளவில் 2024 தேர்தலில் வென்று பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வருவார். அதன்பின்பு வரும் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த யார் வந்தாலும் மிகுந்த மகிழ்ச்சி. தலைமை அனுமதித்தால் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் நான் போட்டியிடுவேன். அதிமுக பாஜக கூட்டணி என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. எந்த நேரத்தில் யார் வேட்பாளராக அறிவித்தாலும் ஒருங்கிணைந்து வெற்றிக்கான பணிகளை செய்வோம். நாள்தோறும் கட்சினர் ஒவ்வொருவர் சொல்லும் வார்த்தையை வைத்து கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்க கூடாது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.