லண்டனில் ஹைதராபாத் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை; பிரேசில் நபர் சந்தேகத்தின்பேரில் கைது!

மேற்படிப்புக்காக லண்டனுக்குச் சென்றிருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், தான் தங்கியிருந்த குடியிருப்பில் கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வெம்ப்லியில் (Wembley) உள்ள நீல்டு கிரசன்ட் (Neeld Crescent) பகுதியில் நேற்று (செவ்வாய்) காலை 10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் கொந்தம் தேஜஸ்வினி எனும் ஹைதராபாத் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை

கொலைசெய்யப்பட்ட பெண் குறித்து வெளியான தகவலின்படி, கொந்தம் தேஜஸ்வினி ஹைதராபாத்திலுள்ள சம்பாபேட்டைச் சேர்ந்தவராவார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதுகலை படிப்புக்காக லண்டனுக்குச் சென்ற கொந்தம் தேஜஸ்வினி, தன்னுடைய நண்பர்களுடன் ஒன்றாக வசித்துவந்த நிலையில், கொல்லப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட போலீஸ் அறிக்கையில், `கொலைசெய்ததாக சந்தேகத்தின் பேரில் 24 வயது ஆண், 23 வயது பெண் ஆகிய இருவர் சம்பவ இடத்தில் கைதுசெய்யப்பட்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த அதே குடியிருப்புப் பகுதியில் பிரேசிலைச் சேர்ந்த 23 வயது இளைஞனைச் சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இந்த நடவடிக்கையில் சந்தேகப்படும் நபரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களின் உதவியைப் பெறும் வகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த கெவன் அன்டோனியோ லோரென்கோ டி மொரைஸின் (Keven Antonio Lourenco De Morais) படத்தை போலீஸார் வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்துப் பேசிய போலீஸார், `கைதுசெய்யப்பட்ட பிரேசில் நபர் கொலையின் சந்தேகத்தின் பேரில் வடக்கு லண்டன் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார்‘ என்று கூறினர்.

கொந்தம் தேஜஸ்வினி – ஹைதராபாத்

இந்தச் சம்பவம் குறித்த தகவலறிந்து அதிர்ச்சியடைந்த கொந்தம் தேஜஸ்வினியின் தந்தை, “இந்த ஆண்டு மே மாதம் ஹைதராபாத்துக்கு வரவிருந்த கொந்தம் தேஜஸ்வினிக்கு திருமணம் செய்துவைக்கத் திட்டமிட்டிருந்தோம்” என்று ஊடகத்திடம் கூறினார். அதோடு, கொந்தம் தேஜஸ்வினியின் உடலை இங்கிலாந்திலிருந்து ஹைதராபாத்துக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.