மா.செ பதவிக்கு போட்டி; தஞ்சையில் அதிகரிக்கும் கோஷ்டி… எடப்பாடி பழனிசாமிக்கு புதிய `தலைவலி’

அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன பிறகும், தஞ்சாவூர் மாவட்ட அ.தி.மு.க-வில் இதுவரை மாவட்டச் செயலாளர் பதவி நியமனம் செய்யப்படவில்லை. ரேஸில் இருப்பவர்களிடையே கடும் போட்டி நிலவுவதே இதற்கு காரணமாக சொல்லப்படும் நிலையில் இதனால் கோஷ்டி பூசல் அதிகரித்திருப்பதாகவும் விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்.காமராஜ்

அ.தி.மு.க-வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தில், தான் நினைத்ததை சாதித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதற்கு முன்பே தஞ்சாவூரில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் சென்று விட்ட நிலையில் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் அவரிடம் சென்றதால் ஓ.பி.எஸ் அணியில் இருந்த மேலும் பலர் எடப்பாடியிடம் சரணடைந்தனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அதிகாரம் மிக்கவராக வலம் வந்த வைத்திலிங்கம், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளராக 19 ஆண்டு காலம் கோலோச்சினார். ஜெ.,வின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து அவர் நினைப்பதை டெல்டாவில் செயல்படுத்தியதால் சோழ மண்டல தளபதி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற கூட்டத்தில்

2016 தேர்தலில் வைத்தி தோல்வியடைந்த பிறகு அவருடைய செல்வாக்கு மெல்ல சரிவை நோக்கி சென்றது. அவருடன் நகமும், சதையுமாக இருந்து பலர் மனக்கசப்பு காரணமாக அவர் மீது கொந்தளிப்புடன் சமயம் பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னையில் வைத்திலிங்கம் ஓ.பி.எஸ் பக்கம் செல்ல…, `காலியானது சோழமண்டல கோட்டை’ என்று சொல்கின்ற அளவிற்கு பெரும்பாலானவர்கள் எடப்பாடி அணிக்கு சென்றனர்.

முன்னாள் பகுதி கழக செயலாளரான சரவணன், அம்மா பேரவை மாநில இணை செயலாளர் காந்தி, மதுக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாண ஓடை செந்தில் உள்ளிட்ட பலர் சென்றது பரபரப்பான பேச்சுக்கு அடித்தளமிட்டது. வைத்திலிங்கம் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த அவரது ஆதரவாளர் எம்.ஜி.எம்.சுப்ரமணியன் ஆகியோர் ஓபிஎஸ் பக்கம் சென்றதால் தஞ்சாவூர் வடக்கு மற்றும் தெற்கு செயலாளர் பதவி காலியானது.

காந்தி

பெரும் போராட்டங்களுக்கு பிறகு கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி இது வரை மாவட்ட செயலாளரை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நியமனம் செய்யவில்லை. மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க போட்டியிடும் பலர் தற்போது சோர்ந்தே விட்டனராம். சோழமண்டல தளபதியாக தன்னை முன்னிறுத்தி கொள்ளும் ஆர்.காமராஜ் ஆசியை பெற்று விட்டால் மாவட்ட செயலாளர் பதவி எளிதாக கிடைக்கும் எனவும் சிலர் மெனக்கெட்டனர்.

ஆனாலும் இதுவரை மாவட்ட செயலாளர் பதவி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் அந்த ரேஸில் இருந்த ஒவ்வொருவருக்கும் கீழ் தனி தனி கோஷ்டிகள் முளைத்து விட்டன. இதனால் கோஷ்டி பூசலுக்கு பெயர் போன தி.மு.க-வையே பின்னுக்கு தள்ளி விட்டனர் தஞ்சாவூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் என கட்சியினர் முணுமுணுத்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், “ஒற்றைத் தலைமை விவகாரம் கிளம்பிய போது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றனர். வைத்திலிங்கம் மீதிருந்த வெறுப்பே அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. அதே போல் கட்சி ரீதியாக நடத்தப்பட்ட கூட்டங்கள், எடப்பாடி பழனிசாமி வருகை ஆகியவற்றிற்கு ஒவ்வொருவரும் கடுமையாக பங்காற்றினார்களாம்.

குறிப்பாக தஞ்சாவூரில் ஐந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதற்கு சரவணன் பெரும் ஏற்பாட்டை செய்தார் என கட்சியினரே பரவலாக பேசினர். அதே போல் ஒரத்தநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு எடப்பாடியை வரவேற்பதற்காக கல்யாணஓடை செந்தில், காந்தி, சரவணன், முன்னாள் எம்.எல்.ஏக்களான பட்டுக்கோட்டை சிவீ.சேகர், பேராவூரணி கோவிந்தராசு உள்ளிட்ட பல நிர்வாகிகள் போட்டிக்கொண்டு கவனித்தார்களாம்.

சரவணன்

துரைக்கண்ணு சிலை திறப்பு விழாவில் அவரது மகன் அய்யப்பன் செய்த ஏற்பாட்டை பார்த்து எடப்பாடி பழனிசாமியே உற்சாகமடைந்து விட்டதாக அப்போது பேசப்பட்டது. இருப்பை தக்க வைத்து கொள்ளவும், தங்களுக்கு பதவி கிடைக்க கவனம் பெற வேண்டும் என்றே போட்டி போட்டுக்கொண்டனர். எடப்பாடி பொதுச்செயலாளர் ஆன பிறகும் அவர்களிடையே இருந்த வேகம் அதிகரித்தது. ஆனால் தற்போது கட்சி உறுப்பினர் சேர்க்கையில் கூட ஆர்வம் காட்டாமல் தனி தனி கோஷ்டியாக பிரிந்து சோர்ந்து காணப்படுகின்றனர்.

மாவட்ட செயலாளர் நியமனம் செய்யப்படாததே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வடக்கு, தெற்கு என இருப்பதை மூன்றாக பிரிக்க உள்ளனர். தஞ்சாவூர் வடக்கில் அய்யப்பன், முன்னாள் எம்.பி. பாரதிமோகன், அசோக்குமார். மத்தியில் காந்தி, ரெத்தினசாமி, ராஜமாணிக்கம், சமீபத்தில் அ.ம.மு.கவிலிருந்து வந்த மா.சேகர், தெற்கில் கல்யாணஓடை செந்தில், சிவீ.சேகர், கோவிந்தராசு, திருஞானசம்பந்தம் ஆகியோர் ரேஸில் உள்ளனர். மாநகர செயலாளர் பதவியே போதும் என சரவணன் போட்டியிலிருந்து ஒதுங்கி நிற்பதாக சொல்லப்படுகிறது.

கல்யாண ஓடை துரை.செந்தில்

இவர்களுக்கிடையே பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுவதால் ஆர்.காமராஜ் யாருக்கு சிபாரிசு செய்வது என தெரியாமல் விழி பிதுங்கியிருப்பதாக கூறுகின்றனர். ரேஸில் இருக்கும் பலர் எடப்பாடியிடம் நேரடியாக தொடர்பில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை சமாளிக்க இரண்டு சட்டமன்ற தொகுதிகள் வீதம் நான்கு மாவட்டங்களாக பிரித்து விடலாம் மாவட்டத்தையும் தன் கைக்குள் வைத்திருக்கலாம் என கருதி ஆர்.காமராஜ் காய்களை நாகர்த்தியிருக்கிறார்.

இதை விரும்பாத பலரும் எடப்பாடியிடம் முறையிட அதிலிருந்து பின் வாங்கி மூன்றாக பிரிக்க திட்டமிட்டுள்ளனர். டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்த பிறகு ஒரத்தநாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தினகரனுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டார் வைத்திலிங்கம். அதன் பிறகு வைத்திலிங்கம் தரப்பு உற்சாகமாக காணப்படுவதுடன் எடப்பாடி பக்கம் சென்றவர்களை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கவும் காய்கள் நகர்த்தி வருகின்றனர்.

அய்யப்பன்

இந்த நேரத்தில் மாவட்ட செயலாளர் நியமனம் செய்யாதது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் கோஷ்டி பூசலும் கடுமையாக அதிகரித்திருக்கிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் இது அப்பட்டமாக வெளிபட சீனியர் ஒருவர் இதை தொடரவிட்டால் தேர்தலிலும், கட்சியின் வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கோஷ்டியாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைப்பது என்பது கடினமான காரியம் இது எடப்பாடிக்கு கவனத்துக்கு சென்றதா என்று தெரியவில்லை என்று தன் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வரும் 5-ம் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுமே, தஞ்சாவூர் பதவிக்கான நியமனமும் வந்து விடும் என ரேஸில் இருக்கும் பலரும் உற்சாகமானர்கள். ஆனால் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை என்கிறார்கள். வைத்திலிங்கம், தினகரன் தரப்பிற்கு எதிராக அரசியல் செய்து கட்சியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் தாமதிக்காமல் மாவட்ட செயலாளர் பதவியை நியமனம் செய்ய வேண்டும்” என்றனர்.

அ.தி.மு.க நிர்வாகிகள்

எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த சிலரிடம் பேசினோம், “பதவியை பிடிக்க போட்டி நிலவுவது உண்மை தான். ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு ஒன்றின் தீர்ப்புக்காக எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். அது வந்த உடனே கட்சிக்கு விசுவாசமாக உழைக்க கூடிய நபர்களுக்கு பதவி கொடுப்பார். தற்போது கோஷ்டி பூசல் நிலவினாலும் எடப்பாடி அறிவிப்பிற்கு பிறகு அதை ஏற்று கொண்டு அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தற்போது உறுப்பினர் சேர்க்கையில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.