ஆசிய கோப்பை 2023: அடுத்தடுத்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு அடிக்கும் ஜாக்பாட்

காயம் காரணமாக நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா, அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளார். அதுவும் இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் போட்டியில் வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அவருக்கு வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னொரு ஜாக்பாட்டை கொடுக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதில் ஆசிய கோப்பையில் இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்த அவருக்கு பக்கபலமாக பும்ராவை துணைக் கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு, அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக சாத்தியமான அனைத்து விருப்பங்களையும் சரிபார்க்க முடிவு செய்திருக்கிறது. அதில் வரவிருக்கும் ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியையும் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனையொட்டி திங்கட்கிழமை டெல்லியில் பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டிராவிட் இருவரும் இந்த கூட்டத்தில் உடல் ரீதியாக கலந்து கொள்வார்களா அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதில் முக்கிய வீரர்களான கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இன்னும் தங்கள் உடற்தகுதியை நிரூபிக்கவில்லை என்பதால் இது குறித்து ஆலோசிக்க இருக்கின்றனர். அவர்கள் ஒருவேளை விளையாட முடியாமல் போனால் மாற்று வீரர்கள் பட்டியலில் யாரை சேர்ப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.