உலகக் கோப்பை தொடரில் பாண்டியாவுக்கு பின்னடைவா – பிசிசியின் பிளான் என்ன?

Bumrah As Vice Captain: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில், எதிர்காலத்தில் ரோஹித் சர்மாவிடம் இருந்து தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன்னணி போட்டியாளராக ஹர்திக் பாண்டியா காணப்படுகிறார். எதிர்வரும் ஆசிய கோப்பை  தொடர் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆகிய இரு அணி முக்கிய தொடரின் துணை கேப்டனாக அவரே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியிருப்பது இந்த விஷயத்தில் மற்றொரு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. 

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் பொறுப்பை பும்ராவிடம் பிசிசிஐ ஒப்படைத்துள்ளது. ஹர்திக் பாண்டியா வழக்கமான டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் அணிக்கு திரும்பியதால் அவர் மீதான நம்பிக்கை இப்போது ஒரு புதிய திருப்பத்தை உருவாக்குகிறது. அடுத்த 3 மாதங்களில் நடைபெறும் இரண்டு பெரிய போட்டிகளுக்கும் பாண்டியாவுடன் துணைக் கேப்டன் பதவிக்கு பும்ரா ஒரு போட்டியாளராக இருப்பார் என பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

“தலைமைத்துவ சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், 2022ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்ததால், பும்ரா பாண்டியாவை விட முன்னணியில் இருக்கிறார்.  தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது பாண்டியாவுக்கு முன் ஒருநாள் துணைக் கேப்டனாகவும் இருந்துள்ளார்,” என்று பிசிசிஐ வட்டாரத்தின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ஆசியா கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர் இரண்டிற்கும் பும்ரா ரோஹித்தின் துணை ஆக்கப்படுவதைப் பார்த்தால் ஆச்சரியப்பட வேண்டாம். ருதுராஜுக்கு பதிலாக அயர்லாந்தில் அவர் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்ததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்” என்று அந்த வட்டாரத்தில் இருந்து மேலும் தகவல்கள் கூறுகின்றன. 

பாண்டியாவுக்கு பின்னடைவு?

சமீபத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரில் அணியை வழிநடத்திய பாண்டியா, தனது முதல் தோல்வியை ருசித்தார். அதன்பின், தனது கேப்டன்ஸி பல்வேறு ஆய்வுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்டியா உள்ளார். முகேஷ் குமாரை டெத் ஓவர்களில் பயன்படுத்துதல் மற்றும் அக்சர் பட்டேலை பந்துவீச பயன்படுத்தாதது போன்ற தவறான முடிவுகளும் இதில் அடங்கும். 

இன்று இந்திய அணி அறிவிப்பு?

மேலும், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இன்று பிசிசிஐ-யால் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, ஆசிய கோப்பை அணியில் இடம்பெறுபவர்கள் தான் பெரும்பாலும் ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கும் தகுதிபெறுவார்கள். எனவே, இந்தியாவின் மிடில்-ஆர்டர், சுழற்பந்துவீச்சு, இடது கை வீரர் என பல கேள்விகளுக்கு பிசிசிஐயின் அணித் தேர்வு பதிலை கொடுக்கும் என கூறப்படுகிறது. 

இந்திய இளம் அணி தற்போது அயர்லாந்தில் டி20 தொடரை விளையாடி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரின் மேல் பல்வேறு எதிர்பார்ப்பு உள்ளது. கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டு, தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் ஆசிய கோப்பை அணியில் இடம்பிடிப்பார்களா என்ற கேள்வியும் உள்ளது. மேலும், தற்போது அறிமுகமாகியுள்ள திலக் வர்மா இந்தியாவின் இடதுகை தாகத்தை மிடில் ஆர்டரில் தீர்ப்பார் எனவும் கூறப்படுகிறது, இதனால் சூர்யகுமாரின் வாய்ப்பும் குறையலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.