உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே, ஷைலி சிங் ஏமாற்றம்

புடாபெஸ்ட்,

உலக தடகளம்

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று தொடங்கியது. 27-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 200 நாடுகளை சேர்ந்த 2,100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடக்க நாளான நேற்று இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதில் ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தின் தகுதி சுற்றில் தேசிய சாதனையாளரான இந்திய வீரர் அவினாஷ் சாப்லே பங்கேற்றார். அவர் பந்தய தூரத்தை 8 நிமிடம் 22.24 வினாடியில் கடந்து தனது பிரிவில் 7-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார். 2,300 மீட்டர் வரை முன்னிலை வகித்த அவினாஷ் சாப்லே அதன் பிறகு பின்னுக்கு தள்ளப்பட்டார். அவர் இலக்கை கடக்க தனது தேசிய சாதனையை விட (8 நிமிடம் 11.20 வினாடி) கூடுதல் நேரம் எடுத்து கொண்டார். இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட 36 வீரர்கள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்றில் களம் இறங்கினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 3-வது முறையாக கலந்து கொண்ட மராட்டியத்தை சேர்ந்த 28 வயதான அவிவாஷ் சாப்லே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் போவது இதுவே முதல்முறையாகும். அவர் கடந்த ஆண்டு (2022) 11-வது இடத்தையும், 2019-ம் ஆண்டு 13-வது இடத்தையும் பிடித்து இருந்தார்.

கடைசி இடம் பெற்ற

இந்திய வீரர்

இதேபோல் ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைபந்தயத்திலும் இந்திய வீரர்களின் செயல்பாடு மெச்சும் வகையில் அமையவில்லை. 50 வீரர்கள் பங்கேற்ற இந்த பந்தயத்தில் 2 பேர் இலக்கை நிறைவு செய்யவில்லை. ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்திய வீரர்கள் விகாஷ் சிங் (1 மணி 21 நிமிடம் 58 வினாடி) 28-வது இடத்தையும், பரம்ஜித் சிங் (1 மணி 24 நிமிடம் 02 வினாடி) 35-வது இடத்தையும் பெற்றனர். தேசிய சாதனையாளரான ஆகாஷ்தீப் சிங் (1 மணி 31 நிமிடம் 12 வினாடி) பெரும் ஏமாற்றம் அளித்து கடைசி இடத்துக்கு (47-வது ) தள்ளப்பட்டார்.

20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் ஸ்பெயின் வீரர் அல்வரோ மார்ட்டின் 1 மணி 17 நிமிடம் 32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் தங்கப்பதக்கத்தை ஸ்பெயின் கைப்பற்றியது. சுவீடன் வீரர் பெர்சுஸ் கார்ஸ்ரோம் (1 மணி 17நிமிடம் 39 வினாடி) வெள்ளிப்பதக்கமும், பிரேசில் வீரர் காயோ போன்பிம் (1 மணி 17 நிமிடம் 47 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

ஷைலி சிங் 24-வது இடம்

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தகுதி சுற்றில் 36 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் சரிசம எண்ணிக்கையில் ‘ஏ’, ‘பி’ என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு களம் இறங்கினர். இதில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்து இருந்த 19 வயது இந்திய வீராங்கனை ஷைலி சிங் 6.40 மீட்டர் தூரம் தாண்டி தனது பிரிவில் 14-வது இடமும், ஒட்டுமொத்தத்தில் 24-வது இடமும் பெற்று நடையை கட்டினார். இரு பிரிவிலும் 6.80 மீட்டர் அல்லது அதற்கு குறைவாக சிறந்த தூரம் தண்டிய 12 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷைலி சிங் தனது சிறந்த செயல்பாடான 6.76 மீட்டர் தூரத்தை எட்டி இருந்தால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கலாம்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.