"`ஜெய் பீம்'க்கு விருதில்லை; `தி காஷ்மீர் ஃபைல்ஸ்'க்கு விருதா?"- பி.சி.ஸ்ரீராம் காட்டம்

2021ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்டு திரைப்பட விருதுகளுக்குத் தகுதி பெற்ற இந்தியத் திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன.

இந்தத் தேசிய திரைப்பட விருதுகளின் போட்டியில் ‘ஜெய் பீம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘கர்ணன்’ உள்ளிட்ட பல முக்கியப் படங்கள் போட்டியில் இடம்பெற்றிருந்தன. இத்திரைப்படங்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள்.

ஜெய்பீம்

இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட 69வது தேசிய திரைப்பட விருதுகளில் இத்திரைப்படங்களுக்கு எந்தவொரு விருதும், ஸ்பெஷல் மென்ஷன்களும் அறிவிக்கப்படவில்லை.

இது நம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அதேசமயம் இந்த 69வது தேசிய திரைப்பட விருதுகளின் முடிவில் அரசியல் கலந்திருப்பதாகப் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக முன்வைத்து வருகின்றனர்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்

குறிப்பாக, 1990-களில் நடந்த காஷ்மீர் இந்து பண்டிட்களின் வெளியேற்றம் மற்றும் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி காஷ்மிர் பைல்ஸ்’ 2021-ம் ஆண்டு வெளியாகி நாடெங்கும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற 53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் நாடவ் லேபிட், “இந்தியாவின் இப்படியான மதிப்புமிக்க திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்றதொரு பிரசாரத் தன்மை வாய்ந்த இழிவான படத்தைப் பார்த்தது மன உளைச்சலையும் அதிர்ச்சியையும் தருகிறது” என்று கூறியிருந்தார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்திற்கு, ‘தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது’ வழங்கப்பட்டது தவறான முடிவு எனப் பலரும் தங்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், “இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடத் திரையுலகில் உள்ள நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். 2023 தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இருப்பினும், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை அவர்கள் விட்டுவிட்டார்களா? இல்லை ‘இந்தியா’வின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தைக் கொடுத்ததா?

இந்த தசாப்தத்தில் மிக மோசமாக முடிவெடுக்கப்பட்டு விருது அறிவிக்கப்படத் திரைப்படம் என்றால் அது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்தான்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினும், “சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரை விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதுபோல் பலரும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து தங்கள் விமர்சனங்களையும், ஆதரவையும் தெரிவித்த வண்ணமிருக்கின்றனர்.

`தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது மற்றும் `ஜெய் பீம்’ படத்திற்கு எந்தவொரு விருதும் அறிவிக்கப்படாதது குறித்த உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.