‘இண்டியா’வின் மும்பை கூட்டம் | “எதிர்க்கட்சிகளிடம் மிகுதியான பக்குவம்” – டி.ராஜா

மும்பை: எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் பலரும் தற்போது மும்பைக்கு வந்த வண்ணம் உள்ளனர். “எதிர்க்கட்சிகள் தற்போது மிகுந்த பக்குவத்தைப் பெற்றுள்ளன” என்று டி.ராஜா கூறினார்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட ‘இண்டியா’ கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதற்காக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் மும்பைக்கு வந்த வண்ணம் உள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அக்கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சதா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோர் மும்பைக்கு வருகை தந்துள்ளனர். மும்பை வரும் தலைவர்களுக்கு காங்கிரஸ், சிவ சேனா(உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) உள்ளிட்ட கூட்டணி கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, “நமது நாட்டையும், நமது அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே ‘இண்டியா’ கூட்டணியின் முக்கிய நோக்கம். நமது நாடு தற்போது மிகப் பெரிய நெருக்கடியில் உள்ளது. பாஜக – ஆர்எஸ்எஸ் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தற்போது மிகுந்த பக்குவத்தைப் பெற்றுள்ளன. ஒன்றாக இணைந்து எத்தகைய முடிவையும் எடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், “பாஜக அரசை அகற்றும் வலிமை ‘இண்டியா’ கூட்டணிக்கு உள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் எதிர்கால திட்டம் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழுக்கள் குறித்தும் அறிவிப்பு வெளியாகும். ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்துத் தலைவர்களும் இது குறித்து முடிவெடுப்பார்கள்” என குறிப்பிட்டார்.

மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராம் கோபால் யாதவ், “ராம்தாஸ் அதவாலே, மாயாவதி ஆகிய இருவரும் அரசியல் செல்வாக்கு அற்றவர்களாக ஆகிவிட்டார்கள்” என குறிப்பிட்டார். ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றும், ‘இண்டியா’ கூட்டணி மேலும் விரிவடையும் என்றும் ராஷ்ட்ரிய லோக் தள் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.