திருச்சி, சேலம், நெல்லை மக்களுக்கு குட் நியூஸ் : வருகிறது மெட்ரோ.. வெளியான செம அப்டேட்!

தமிழகத்தில் இன்னும் சில நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 2015ஆம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், கோயம்பேடு என முக்கிய பகுதிகளை மெட்ரோ ரயில்கள் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை முதல் வழித்தடத்தில் 23.1 கி.மீயும், சென்னை சென்ட்ரலில் இருந்து புனித தோமையர் மலை வரை 22 கி.மீ தூரமும் என மொத்தமாக 54 கி.மீ வரை மெட்ரோ சேவை வழங்கி வருகிறது.

பொதுமக்களும் நெரிசலின்றி குளுகுளு ஏசியுடன் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வருகின்றனர். சென்னையின் மற்ற பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுபோலவே மதுரை மெட்ரோவுக்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

திருமங்கலம் – ஒத்தக்கடை இடையே 20 நிலையங்களுடன் 31 கிமீ மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது. இதற்கான ஏலப் பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிந்து பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. சேலம், திருச்சி, திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்தது. அதன்படி, திருச்சியில் 26 கி.மீக்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீக்கு ஒரு கட்டமாகவும் 45 கி.மீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்திலும் மெட்ரோ வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

நெல்லை பாஜகவினர் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான வாய்ப்பு இல்லை. அதே சமயம் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை குறித்து விரைவில் தமிழக அரசு பரிசீலனை செய்து விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தும். அதன்பிறகு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும். இந்த நடைமுறை முடிந்ததும் மெட்ரோ பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ தொடர்பான அறிவிப்பு திருச்சி, சேலம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.