Virat Kohli: “அஷ்வின் பெயரையும் சொல்லுங்க!" – ஆட்டநாயகன் விராட் கோலி நச்!

உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 257 ரன்களை இந்திய அணி சேஸ் செய்திருந்தது.

வெற்றிக்கு 1 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் வின்னிங் ஷாட்டாக சிக்சர் அடித்து அணியை வெல்ல வைத்ததோடு தனது சதத்தையும் நிறைவு செய்தார் விராட் கோலி. ஓடிஐ போட்டிகளில் கோலி அடிக்கும் 48 வது சதம் இதுவாகும்.

Virat

விராட் கோலிதான் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார். விருதை வாங்கிவிட்டு அவர் பேசுகையில், “ஜடேஜாவிற்கு செல்ல வேண்டிய விருதை நான் அபகரித்துக் கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அணிக்காக பெரிதாக பங்களிப்பு செய்ய எண்ணினேன். நடப்பு உலகக்கோப்பையில் இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்திருந்தேன். ஆனால், அதை சதமாக மாற்ற முடியவில்லை. இந்த முறை அதை சரியாக செய்துவிட வேண்டும் என நினைத்தேன். ஆரம்பத்தில் சில நோ-பால்களை எதிர்கொண்டு ஃப்ரீ ஹிட்டோடு இன்னிங்ஸை தொடங்கியதெல்லாம் ஒரு கனவு போன்றுதான் இருந்தது.

பிட்ச்சும் சிறப்பாகவே இருந்தது. என்னுடைய ஆட்டத்தை ஆடுவதற்கான வழிவகையை பிட்ச்சே உருவாக்கிக் கொடுத்தது. அணிக்குள் நல்ல மகிழ்வான சூழலே நிலவுகிறது.அத்தனை வீரர்களுமே துடிப்போடு உற்சாகமாக அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் ஆடுவதில் பெரும் மகிழ்ச்சி!” என்றார்.

இடையில் வர்ணனையாளர் கேள்வி கேட்கும்போது, “2011 உலகக்கோப்பையை வென்ற வீரர்களில் நீங்கள் மட்டும்தான் இப்போது அணியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த உலகக்கோப்பையை பற்றிய சூழல் அதிகம் தெரியுமே?” எனக் கேட்டார்.

Virat

கேள்வி வந்து விழுந்த அடுத்த நொடியே தாமதமின்றி, “நான் மட்டும் இல்லை. அஷ்வினும் 2011 உலகக்கோப்பையில் ஆடினார். ஆக, நாங்கள் இரண்டு பேர் உலகக்கோப்பையை வென்ற அனுபவத்தோடு இருக்கிறோம்.” என்றார். கோலியின் இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வர்ணனையாளர் மறந்தாலும் எந்த தயக்கமுமின்றி அஷ்வின் பெயரையும் கோலி உச்சரித்து அங்கீகரித்தது அவரை ஒரு ‘Team Man’ என கூறுவதன் அர்த்தத்தை மீண்டும் உணர வைத்தது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.