வால்பாறையில் ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு: சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

வால்பாறை: வால்பாறைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் அங்குள்ள நல்லகாத்து ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள கூழாக்கல் ஆறு, சோலையாறு ஆறு, நல்லகாத்து ஆறு ஆகியவற்றில் குளிப்பது வழக்கம். இன்று (அக்.20) கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு மதியம் சோலையாறு அருகே உள்ள நல்லகாத்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற மலுமிச்சபட்டியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சரத் (20) என்பவர் தண்ணீரில் சுழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தார். அவரைக் காப்பாற்ற சென்ற மலுமிச்சப்பட்டியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் நபில் அர்சத் (20), கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தைச் சேர்ந்த தனுஷ்குமார் (20), கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தைச் சேர்ந்த அஜய் (20) மற்றும் வினித்குமார் (23) ஆகியோர் அவரை காப்பாற்றச் சென்றனர்.

எஸ்டேட்டில் வேலை செய்து கொண்டிருந்த உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்களும் உடன் இணைத்து காப்பாற்ற முயன்ற நிலையில் 5 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வால்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துபாண்டி தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் மற்றும் போலீஸார் தண்ணீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு 5 பேரின் உடல்கள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வால்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் தனுஷ்குமார் மற்றும் வினித்குமார் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.