காசா பகுதிக்கு நிவாரண பொருள்: இரண்டு பிணைக்கைதிகள் விடுவிப்பு| Relief to the Gaza Strip included the release of two hostages

ரபா: போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்காக, பல்வேறு நாடுகள் வழங்கிய 30 லட்சம் கிலோ எடையுள்ள நிவாரணப் பொருட்கள், 200 லாரிகளில், எகிப்து எல்லை வழியாக, ஐ.நா.,வின் மேற்பார்வையில் நேற்று அனுப்பப்பட்டன.

இதற்கிடையே, தங்கள் வசம் இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பிணைக்கைதிகளை, ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர் இரண்டு வாரங்களை கடந்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய தாக்குதலில், 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தவிர, 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதற்கு பதிலடி தரும் வகையில், பாலஸ்தீன அகதிகள் வசிக்கும் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீது, இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

போராக அறிவித்து நடந்து வரும் இந்த தாக்குதலில், 4,100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் முழுதுமாக முற்றுகையிட்டுள்ளது. மற்றொரு அண்டை நாடான எகிப்தில் இருந்து காசாவுக்கு செல்லும் ரபா பகுதியையும் இஸ்ரேல் மூடியது.

மேலும், காசா பகுதிக்கான மின்சாரம், உணவுப் பொருட்கள், எரிபொருள், குடிநீர் உள்ளிட்டவற்றின் வினியோகத்தையும் இஸ்ரேல் நிறுத்தியது. இதனால், காசாவில் உள்ள, 23 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், உதவிகள் வழங்கும்படி, இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்தின.

ஆனால், பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்ட, 200க்கும் மேற்பட்டோரை விடுவித்தால் மட்டுமே காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்ப அனுமதிக்கப்படும் என, இஸ்ரேல் கூறி வந்தது.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது 17 வயது மகளை, ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் விடுவித்தனர்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வாயிலாக, அவர்கள் எகிப்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து எகிப்தில் இருந்து, காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, உதவிப் பொருட்களுடன் கூடிய லாரிகள், ரபா எல்லை வழியாக நேற்று அனுமதிக்கப்பட்டன.

பல நாடுகள் மற்றும் அமைப்புகள் ஐ.நா.,வுக்கு வழங்கிய 30 லட்சம் கிலோ எடையுள்ள நிவாரணப் பொருட்கள், 200 லாரிகள் வாயிலாக எடுத்துச் செல்லப்பட உள்ளன. இந்த லாரிகள் நேற்று ரபா எல்லை வழியாக பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

காசாவில் உள்ள, 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள், எகிப்து வழியாக வெளியேறுவதற்காக, ரபா எல்லைப் பகுதியில் குவிந்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.