பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு; தமிழ்நாட்டில் சாத்தியப்படுமா… என்ன நிலை?

ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவுசெய்திருக்கிறது. ‘ஆந்திராவில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு வரும் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கும்‘ என்று அந்த மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

ஜெகன்மோகன் ரெட்டி

சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்கெனவே இரண்டு நாள்கள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 9-ம் தேதி விரிவாக கணக்கெடுக்கும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார். ஏற்கெனவே, பீகாரில் நிதிஷ் குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்து, அதன் முழு விவரங்களையும் சட்டமன்றத்தில் வெளியிட்டது.

அதன் மூலம், சுதந்திர இந்தியாவில் சாதிவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்ட முதல் மாநிலம் என்ற பெருமையை பீகார் பெற்றது. சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில், பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை 65 சதவிகிதமாக அதிகரிப்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, பீகார் அரசு சமீபத்தில் வெளியிட்டது.

நிதிஷ் குமார்

தற்போது, ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த ஜெகன்மோகன் ரெட்டி அரசு முடிவுசெய்திருக்கிறது. ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திமுடித்த கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களும் அது தொடர்பான விவரங்களை விரைவில் வெளியிடவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சியான பா.ம.க மட்டுமன்றி, ஆளும் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முன்வைத்திருக்கிறது.

“நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், அரசியல் பிரதிநிதித்துவத்திலும் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெற முடியாத நிலை நீடிக்கிறது. இது மிகப்பெரிய சமூக அநீதி. பீகார் மாநில அரசைப்போல, தமிழ்நாடு அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் எஸ்.சி., எஸ்.டி பிரிவினரின் இட ஒதுக்கீடு அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப 21 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்” என்று திருமாவளவன் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டார்.

திருமாவளவன்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ஏற்கெனவே அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அதே கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ராமதாஸ் தனது அறிக்கையில், ‘கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, இந்தியாவின் நான்காவது மாநிலமாக ஆந்திராவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தென்படவில்லை.

டாக்டர் ராமதாஸ்

மனமிருந்தால் மார்க்கமுண்டு. ஆனால், மார்க்கமிருந்தும் மனம் இல்லாததால், தமிழக அரசே, 2008-ம் ஆண்டின் புள்ளியியல் சட்டத்தைப் பயன்படுத்தி சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு பதிலாக, மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு, முதல்வர் ஸ்டாலின் காத்திருக்கிறார்’ என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசை, காங்கிரஸ் வலியுறுத்திவருகிறது. தற்போது சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் ஐந்து மாநிலங்களில், `காங்கிரஸ் கட்சி எந்தெந்த மாநிலங்களில் வெற்றிபெறுகிறதோ, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

ராகுல் காந்தி

அடுத்த சில மாதங்களில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஆந்திரா அரசு நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது. தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் சாதிவாரி மக்கள்தெகை கணக்கெடுப்பை விரைவில் நடத்தவிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தன்னுடைய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என்று அறிவிக்கவில்லை.

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், பிரதமரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றன. ‘பீகாரைப் பின்பற்றி தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம்.. அதற்கு எந்தத் தடையும் இல்லை.. உச்ச நீதிமன்றமே அதை அனுமதிக்கிறது’ என்றும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் அமைப்புகள் கூறுகின்றன.

ஸ்டாலின்

இந்த நிலையில், மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்த பதிலும் சொல்லாத முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இன்று (நவ. 27) நடைபெற்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசினார். அப்போது, “மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டை முறையாக கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் அடங்கிய  குழுவை அமைக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.

ஆக, மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை. என்ன காரணம் என்று தி.மு.க தரப்பில் கேட்டபோது, “மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டிய மத்திய அரசின் வேலை. அந்த வேலையை மாநில அரசு செய்தால், அதற்கு சட்ட அங்கீகாரமும் எதுவும் இல்லை” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.