" `மலையில தான் தீ பிடிக்குது ராசா' வரிகளை நாட்டுப்புறப் பாடலில் இருந்து தான் எடுத்தேன்"- யுகபாரதி

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

திரைப்பட கவிஞர் திரு. யுகபாரதி இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ‘அறமும் அகமும்’ என்ற தலைப்பில் பேசிய அவர், “இந்த விழாவில் எனக்கு ஒரு சிறிய வருத்தம், அது என்னவென்றால் நான் ஏன் சேலத்தில் பிறக்கவில்லை. ஒரு காலத்தில் சினிமா என்றாலே சேலம்தான்” என சேலத்தின் சிறப்பைக் கூறி தனது உரையைத் தொடங்கினார். 

சங்க இலக்கிய பாடல் மூலம் ‘அறமும் அகமும்’ என்ற தலைப்பின் சாராம்சத்தை கூறினார். ‘மாமன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘ராசா கண்ணு’ பாடலை யுகபாரதி சேலத்தில் எழுதியதாகவும் அப்போது இயக்குநர் மாரிசெல்வராஜ் மற்றும் கவிஞர் வெய்யில் ஆகியோர் உடனிருந்ததாகவும் கூறினார்.

சேலம் புத்தகத் திருவிழா 2023| பாடலாசிரியர் யுகபாரதி

சேலத்தில் தான் இந்தியாவின் முதல் கலர் திரைப்படமான அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படம் தயாரிக்கப்பட்டது என்பதனையும் கூறிய அவர், சேலத்தில் நடைபெற்ற மற்றொரு சிறப்பையும் அவர் பகிர்ந்து கொண்டார். இது குறித்து பேசிய அவர், “சேலம் மாடர்ன் தியேட்டருக்குத் தொடர்ச்சியாக திரைப்பட பாடல்களை  எழுதி வந்த மருதகாசிக்கும் மாடர்ன் தியேட்டரின் மேலாளருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு கருத்து வேறுபாட்டின் காரணமாக மருதகாசி தொடர்ந்து சேலம் மாடர்ன் தியேட்டருக்கு திரைப்பட பாடல்களை எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். ஒருமுறை சேலம் மாடர்ன் தியேட்டரின் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்திற்கு மருதகாசிதான் பாடல்கள் எழுத வேண்டும் என மேலாளரிடம் கூறினார்.

அப்போது அந்த குறிப்பிட்ட மேலாளர் டி.ஆர். சுந்தரமிடம் “இப்பொழுதெல்லாம் மருதகாசி சென்னையில் எடுக்கிற படங்களுக்கு மட்டும்தான் பாடல்கள் எழுதுவாராம், சேலத்துக்கு வந்து எழுத மாட்டாராம்” என்று கூறினார். இதனைக் கேட்டவுடன் டி.ஆர். சுந்தரம் ‘நம்மை மதிக்காத மருதகாசி இல்லனா என்ன அவரவிட ரொம்ப சிறப்பா பாடல் எழுதுபவர் யார்?’ எனக் கேட்டார். உடனே அந்த மேலாளர் உடுமலை நாராயணன் பெயரை கூறினார். பின், உடுமலை நாராயணனிடம் டி.ஆர். சுந்தரம் பாடல்கள் எழுதித்தரும்படி கேட்டார்.

பாடலாசிரியர் யுகபாரதி

அப்பொழுது உடுமலை நாராயணன், ‘எப்பவுமே உங்களுக்கு மருதகாசிதான பாடல் எழுதுவாரு’ என்று கேட்டார். அதற்கு டி. ஆர். சுந்தரம், ‘மருதகாசி இப்ப எல்லாம் சென்னை படங்களுக்கு மட்டும் தான் பாடல்கள் எழுதுவாராம். அதனால் தான்’ என்று கூறினார். பின், மொத்தம் எத்தனை பாடல்கள் எழுதித் தர வேண்டும் என நாராயணன் கேட்டார். அதற்கு டி.ஆர். சுந்தரம் பத்து பாடல்கள் என்றவுடன் கவிராயர் பாடல்களை எழுத ஒப்புக்கொண்டு சேலத்திற்கு வர பயணச்சீட்டை பதிவு செய்யவும் சொன்னார்.

ஆனால், நான் வரும்போது என்னுடன் ஒரு உதவியாளனை அழைத்து வருவேன் என்று அவர் கூறினார். அதற்கு டி.ஆர். சுந்தரமும் ஒப்புக்கொண்டார். சேலம் மாடர்ன் தியேட்டருக்கு தன் உதவியாளருடன் வந்த உடுமலை நாராயணனைப் பார்த்து  அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஏனென்றால், உதவியாளராக உடுமலை நாராயணனால் அழைத்து வரப்பட்டவர் மருதகாசியா. பின், அந்த மேலாளருக்கும் மருதகாசிக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளை சுமூகமாக தீர்த்து வைத்துவிட்டு, ‘என்னை விட அருமையாக பாடல்கள் எழுதுபவன் மருதகாசி. எனவே, நான் வந்ததற்காக ஒரு பாடலை எழுதுகிறேன்.

சேலம் புத்தகத் திருவிழா 2023| பாடலாசிரியர் யுகபாரதி

மீதம் உள்ள ஒன்பது பாடல்களையும் மருதகாசியே எழுதட்டும்’ எனக் கூறி, தான் எழுதிய ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் பணத்தை வாங்கிக் கொண்டு தன்னைவிட சிறப்பாக பாடல் எழுதும் கவிஞனுக்கு வழி விட்ட நிகழ்வு நடைபெற்ற இடம் சேலம்” என பெருமையுடன் கூறினார்.

மேலும், ‘மாமன்னன்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘மலையில தான் தீ பிடிக்குது ராசா’ என்ற வரிகள் ஒரு நாட்டுப்புறப் பாடலில் இருந்து எடுத்து எழுதியதாகப்  பகிர்ந்து கொண்டார்.  இறுதியாக, தான் இளமையில் படித்த கிழ குழந்தை என்ற ஒரு கதையின் தொடர்ச்சியைக் கூறி அனைவரின் மனதிலும் நீங்காத ஒரு கருத்தை நிலை நிறுத்தி தன் உரையை நிறைவு செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.