பயிற்சி அர்ச்சகர் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தடை பொருந்தும்: ஐகோர்ட் கிளை

மதுரை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி அர்ச்சகர் நியமிப்பதில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடை பொருந்தும் என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் திருக்கோயில் சுதந்திர பரிபாலன ஸ்தலதார்கள் சபை தலைவர் வீரபாகு மூர்த்தி, இணைச் செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை அடிப்படையில் திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக கோயில் செயல் அலுவலர் 28.8.2023-ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

திருச்செந்தூரில் ஆகம விதிகளை முறையாக, முழுமையாக பயின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரிசுதந்திரர்கள் உள்ளனர். இதனால் புதிய அர்ச்சகர்கள் நியமனம் தேவையற்றது. அரசின் ஒரு வருட அர்ச்சகர் பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை முழுமையாக கற்க 5, 6 ஆண்டுகள் ஆகும். எனவே பயிற்சி அர்ச்சகர் நியமனம் தொடர்பான அரசாணை மற்றும் திருச்செந்தூர் கோயில் செயல் அலுவலரின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அதுவரை அரசாணை, அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்.’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிடுகையில், ”பயிற்சி அர்ச்சகர் நியமனம் தொடர்பாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆகமம், வேதம் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ஒரு ஆண்டுக்கு பயிற்சி அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர். இவர்கள் மூத்த அர்ச்சகர்களிடம் பயிற்சி பெறுவர். தனிப்பட்ட முறையில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. மனுதாரர்களைப் போன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அறிவிப்பாணையில் ஆகம விதிகள் மீறல் இல்லை. நிரந்தர அர்ச்சகர் நியமனம் செய்தால் மட்டுமே வழக்கு தொடர முடியும். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ”இதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதில் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையாணை இந்த வழக்கிற்கும் பொருந்தும். பயிற்சி அர்ச்சகர் நியமன விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். மனு முடிக்கப்படுகிறது.” இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.