இந்திய அணிக்கு தொடரும் சோகம்… இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவர் விளையாடுவது சந்தேகம்!

India National Cricket Team: கிரிக்கெட்டில் கடந்தாண்டு ஒருநாள் போட்டிகளுக்கான ஆண்டு என்றால், இந்தாண்டு டி20 போட்டிகளுக்கான ஆண்டு எனலாம். ஏனென்றால் கடந்தாண்டு ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றிருந்தால் அதிக ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதத்தில் நடைபெறுவதால், அதுவரை டி20 போட்டிகளுக்குதான் அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்.

இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையும் மிக மிக மதிப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் அதன் இறுதிப்போட்டியும் நடைபெறும் என்றாலும் அனைத்து அணிகளுக்கும் ஒவ்வொரு டெஸ்ட் தொடரும் முக்கியமானதாகும். இதுவரை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றுள்ளன. அந்த இரண்டு முறையும் இறுதிப்போட்டி வரை வந்திருந்த இந்தியா அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

எனவே, இந்திய அணி (Team India) டி20, ஒருநாள் போட்டிகளுக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை டெஸ்ட் போட்டிகளுக்கும் வழங்கி வருகிறது எனலாம். கடந்தாண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் ரோஹித், விராட் கோலி ஆகியோர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடவில்லை. நேரடியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் விளையாடினர். அந்தளவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்திய அணி மதிப்பளித்து வருகிறது எனலாம்.

குறிப்பாக, தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களான பும்ரா, சிராஜ் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான இம்மாத இறுதியில் தொடங்க இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு தயாராகும் வகையில் இதில் அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு பந்துவீச்சில் கைக்கொடுக்கும் முக்கியத் தூணாக விளங்குபவர் முகமது ஷமிதான். ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை தொடரிலேயே அவரின் வெறித்தனமான ஃபார்மை நாம் பார்த்திருப்போம். 7 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் என்பது அசாதாரணமானது. இருப்பினும், அந்த தொடரிலேயே அவரின் கால் பாதத்தில் கடுமையான வலியுடன்தான் விளையாடி உள்ளார் என கூறப்படுகிறது. அதன்பின் அவர் எந்த போட்டியிலும் இப்போது வரை விளையாடவில்லை. 

ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் நிச்சயம் பங்குபெறுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் காயம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது ஷமி (Mohammed Shami Injury), முதலிரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. 

“ஷமி இன்னும் பந்து வீசத் தொடங்கவில்லை, அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமாக உள்ளது” என பிசிசிஐ வட்டாரத்தில் ஒருவர் ஊடகத்திற்கு தகவல் அளித்துள்ளார். தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்தும் கடைசி நேரத்தில் ஷமி விலகியது நினைவுக்கூரத்தக்கது. வரும் ஜன. 25ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் இந்த தொடர் நிறைவு பெறுகிறது. 

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு..! முக்கிய வீரர் விலகல்?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.