"விஜயகாந்த் குடும்பத்தினர் சொன்ன அந்த வார்த்தை என்னை ரொம்பவே பாதித்தது! அதனால்…" – ராகவா லாரன்ஸ்

“கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்கத் தயார். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள்” என இயக்குநர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

சென்ற ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியில் இருக்கும் ராகவா லாரன்ஸ், சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின் அவரது வீட்டிற்குச் சென்று கேப்டனின் குடும்பத்தாரையும் சந்தித்தார். அதன் பின் நடந்த விஷயங்கள் குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது…

சண்முகபாண்டியன்

“நானும், எனது தாயாரும் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்குக் கடந்த திங்கள் கிழமையன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். அதன்பின் கேப்டன் இல்லத்திற்குச் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தேன். அவர்களின் குடும்பத்தாரோடு பேசும்போது, அவர்கள் சொன்ன ஒரு விஷயம் என்னை ரொம்பவே பாதித்தது. ‘விஜயகாந்த் சாரின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பது பற்றி என்னிடம் சொன்னார்கள். ‘திரையுலகைச் சேர்ந்த நீங்கள் எல்லோரும்தான் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்கள்.

அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. விஜயகாந்த் சார் திரையுலகிற்குச் செய்யாத உதவிகளே இல்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் கேமியோ கெஸ்ட் ரோல் எல்லாம் செய்வார். அவர் பல ஹீரோக்களை வளர்த்து விட்டிருக்கிறார். அவர் நடித்த ‘கண்ணுபடப் போகுதையா’ படத்தில் ‘மூக்குத்தி முத்தழகு’ பாடலுக்கு நான் நடனம் அமைத்திருக்கிறேன். அவர் ரொம்பவும் அழகாக நடனமாடினார். என்னையும் அதிகம் ஊக்கப்படுத்தினார். அப்படிப்பட்டவரின் பையனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. சண்முக பாண்டியன் நடிக்கும் படம் வெளியாகும் போது முழு வீச்சில் வரவேற்பு தர நானே இறங்கி அனைத்து விளம்பர பணிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன். அந்தப் படக்குழு விருப்பப்பட்டால் அவர்களோடு படத்தின் விளம்பர விழாக்களிலும் கலந்துகொள்வேன்.

ராகவா லாரன்ஸ்

திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோள்… யாராவது நல்ல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள் சண்முகப்பாண்டியனோடு இணைந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன். இது அவரது குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை, அப்போது கேப்டனின் ஆத்மா சந்தோஷப்படும். இது என் மனதுக்குத் தோன்றியது. அவரது மூத்த மகன் பிரபாகரன் அரசியலில் இருக்கிறார். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள். இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.