எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அதில் அனைவருக்கும் பிடித்ததாக இருப்பது மின்சார ஸ்கூட்டர்கள் தான். இந்தியாவில் பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை அதிகமாகவே இருக்கும். இதற்கு காரணமாக அதன் குறைந்த விலை, டிராபிக் காரணங்கள் இருக்கின்றன. தற்போது சந்தையில் நிறைய மாடல்களில் மின்சார ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை இந்த மின்சார ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன.  ஹீரோ, பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்களும் ஓலா மற்றும் ஏதர் போன்ற புதிய நிறுவனங்களும் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்கின்றன. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களை வாங்கும் நீங்கள் சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

விலை: எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டிய முக்கிய விஷயம் அதன் விலை. இந்தியாவில் கிடைக்கும் நல்ல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை ரூ. 1 லட்சத்திற்கு மேல் உள்ளது. இவை பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விலையை விட அதிகம்.  எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் முன், எவ்வளவு வரி சலுகைகள் கிடைக்கிறது மற்றும் வாரண்ட்டி போன்றவற்றை ஆராய்ந்து வாங்குங்கள்.  

வரி சலுகைகள்: மின்சார வாகனங்களை வாங்கினால் இந்திய அரசு சில வரி சலுகைகளை தருகிறது. பிரிவு 80EEB இன் படி, மின்சார வாகனம் வாங்கிய கடனுக்கான வட்டிக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகைகளை பெறலாம். 

கிலோமீட்டர்: எலெக்ட்ரிக் வாகனம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய இரண்டாவது முக்கியமான விஷயம்  அதன் ரேஞ்ச். ​​இந்திய சந்தையில் தற்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிமீ முதல் 200 கிமீ வரை செல்லும் ஸ்கூட்டர்கள் உள்ளன.  நீங்கள் தினமும் அதிக தூரம் பயணிப்பவராக இருந்தால், அதிக கிலோ மீட்டர் செல்லும் வாகனங்களை தேர்வு செய்வது நல்லது.

அம்சங்கள்: புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் போது சில அம்சங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எஞ்சின் இல்லாததால் கால்களை வைக்க நல்ல இடம் இருக்கும்.  சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இரண்டு ஹெல்மெட்கள் கூட வைக்க முடியும்.  எனவே இந்த அம்சத்தைப் பார்த்து வாங்குங்கள். லெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் முன்பு அதனை ஓட்டி பார்த்து உங்களுக்கு செட் ஆகுமா என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  சில மின்சார ஸ்கூட்டர்கள் GPS, ப்ளூடூத் வசதிகளை வழங்குகின்றன. 

சார்ஜ் நேரம்: நீங்கள் வாங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ் ஆக எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது என்பதை பார்த்து கொள்ளுங்கள். அதிக நேரம் எடுக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டாம்.  ஏத்தர், பஜாஜ் போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 5-6 மணி நேரம் ஆகும். 

பேட்டரி ஆயுள்: எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் பேட்டரி ஆயுள். சில மின்சார ஸ்கூட்டர்கள் மாற்றக்கூடிய பேட்டரிகளுடன் வருகின்றன, ஒரு சில மாடல்களில் இந்த வசதி இல்லை. எனவே, எந்த வகையான பேட்டரி ஆயுள் உத்தரவாதம் வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பேட்டரிகளுக்கு குறைந்தபட்சம் 3 வருட உத்தரவாதம் வழங்குகிறார்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.