நாடு பூராகவும் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள்

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் 01.02.2024 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் பாண் எடை தொடர்பான விசேட சுற்றி வளைப்புக்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, ஆரையம்பதி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி ஆகிய நகர்ப் பிரதேசங்களில் இயங்கும் ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்களில் பாண்களின் எடை தொடர்பான சுற்றிவளைப்புக்கள் மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டதாக அதன் மாவட்டப் பொறுப்பதிகாரி என். எம். சப்ராஸ் தெரிவித்தார்.
.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்; பெப்ரவரி 5ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நேற்று (07) புதன்கிழமை பி.ப. 4.00 மணி வரை 30இற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் வெதுப்பகங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், குறைந்த நிறையில் பாண்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாண்களின் விலைகளை வெளிப்படுத்தாமை, முறையான லேபல் இடப்படாமை போன்ற குற்றங்களுக்காக 05 பாண் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய ஒரு இறாத்தல் பாண் 450கிராம் காணப்பட வேண்டும் என்பதுடன் அவசியமாயின் 13.5கிராம் நிறைக் குறைவிற்கும் அரை இறாத்தல் பாண் 225கிராம் 9 கிராம் எடைக் குறைவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பொதி செய்யப்பட்ட, சேமித்து வைக்கப்பட்ட, விற்பனைக்கு வழங்கப்படும், விற்பனைக்காகக் காட்டப்படும் அல்லது சில்லறை அல்லது மொத்தமாக விற்கப்படும் தயாரிக்கப்பட்ட எந்த வகைப் பாணும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையான எடையைக் கொண்டிருக்க வேண்டும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாணின் எடையை காட்சிப்படுத்துமாறு அனைத்து வர்த்தகர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் எதிர்காலத்தில் இச்சுற்றி வளைப்புக்கள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அதிகார சபை மேலும் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.