‘தோழமை கட்சிகளின் வெற்றியை குறைப்பது இண்டியா கூட்டணி நோக்கம் அல்ல” – ஒமர் அப்துல்லா

ஸ்ரீநகர்: “மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கவே ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது. மாறாக, தோழமைக் கட்சிகளின் வெற்றியைக் குறைக்க அது உருவாக்கப்பட்டவில்லை” என்று தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும், தனது கட்சி கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற மூன்று இடங்களை விட்டுத் தராது என்றும் மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களைத் தேர்தலுக்கான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸுடனான தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து விட்டது. காங்கிரஸ் கட்சி ஜம்மு, உதாம்பூர் (ஜம்மு பகுதியில் உள்ளது) லடாக் தொகுதிகளில் போட்டியிடுகிறது. தேசிய மாநாட்டு கட்சி ஸ்ரீநகர், பாராமுல்லாவிலும், மக்கள் ஜனநாயக கட்சி அனந்த்நாகிலும் போட்டியிடுகின்றன என்ற ஊகங்களுக்கு ஒமர் அதுல்லா செவ்வாய்க்கிழமை பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், “நாங்கள் ஏன் எங்கள் தொகுதிகளை விட்டுத்தர வேண்டும்? ‘இண்டியா’ கூட்டணி உருவாக்கப்பட்டதன் நோக்கம் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியைக் குறைப்பதே, கூட்டணிக் கட்சிகளின் வெற்றியைக் குறைப்பது இல்லை. நாங்கள் மூன்று தொகுதிகள் குறித்து மட்டுமே விவாதிப்போம்.

‘இண்டியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை மட்டுமே முடிந்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சியால் முன்வைக்கப்பட்ட சில திட்டங்கள் குறித்து தேசிய மாநாட்டு கட்சிக்குள் விவாதிக்க வேண்டும். அவர்கள் முன்வைத்த ஒரு திட்டம் தேசிய மாநாட்டு கட்சி தலைமையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. அதற்காக இன்னும் சில தினங்களில் நான் டெல்லி செல்ல இருக்கிறேன்.

லடாக் உட்பட மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. அதில் மூன்று தொகுதிகளில் தேசிய மாநாட்டு கட்சி ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ளது. எனவே நாங்கள் ஜம்மு, உதாம்பூர், லடாக் ஆகிய மூன்று தொகுதிகள் குறித்து மட்டுமே விவாதிக்க இருக்கிறோம். அதனால், இது மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று ஓமர் தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி ஸ்ரீநகர், பாராமுல்லா, அனந்த்நாக் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஜம்மு, உதாம்பூர், லடாக்கில் பாஜக வெற்றி பெற்றிருந்ததது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, “கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவில்லை. இது பத்தாவது ஆண்டு. நான் முன்பே கூறியது போல, ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படுவது உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்படுவது வெட்கக் கேடானது. மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வர இருக்கிறார்கள். நல்ல செய்தி வரும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.