“வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு” – முதல்வர், தலைவர்கள் வரவேற்பு @ ஸ்டெர்லைட் மூடல்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரியானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திமுக அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்.”

பாமக தலைவர் ராமதாஸ்: “ஸ்டெர்லைட் ஆலை அங்குள்ள மக்களுக்கும், இயற்கைக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தி வருவதால் அதை மூட வேண்டும் என பல ஆண்டுகளாக பாமக. வலியுறுத்தி வந்தது. ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அவ்வழக்கை நடத்த மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கடந்த ஜனவரி 4-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தி இருந்தேன். அதைப் போலவே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.”.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவுற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று (பிப்.29) ஸ்டெர்லைட் நச்சு ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா குழுமத்தின் மனுவை தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது.

இதன் மூலம் ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்படுவது உறுதியாகி விட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு போராடிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று உள்ளது. இது மதிமுக ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாகப் போராடியதற்குக் கிடைத்த வெற்றி.”

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: “எப்படியாவது ஆலையை திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வாக்குறுதிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்தது. தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உறுதியாகவும், திறமையாகவும் மக்கள் நலன் காக்கப்படும் என்ற நோக்கிலிருந்து வாதாடியதன் காரணமாக உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

சிறப்பான வாதங்களை எடுத்து வைத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.”

> தீர்ப்பு முழு விவரம்: ‘ஸ்டெர்லைட் ஆலை மூடல் சரியே!’ – மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அதிரடி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.